திருச்சி, ஜூலை 3: திருச்சி மாவட்டம், நாகமங்கலம் கிரியா சில்ரன்ஸ் அகாதெமி மெட்ரிகுலேஷன் பள்ளியில் "புவியைக் காப்போம்- புவிக் கோளத்தின் வெப்பம் அதிகரிப்பதைத் தடுப்போம்' என்ற தலைப்பில் மதுரை புவி கலைக் குழுவினரின் நாடக நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில், பூமியின் வெப்பம் ஏன் அதிகரிக்கிறது? இப்படி அதிகரித்து கொண்டே போனால் பூமி என்னவாகும்? வெப்பமடைவதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? எப்படி தடுக்கலாம்? போன்றவற்றை மாணவ- மாணவிகளுக்கு விளக்கும் வகையில் இந்த நாடகம் அமைந்தது.
குழந்தைகள் மத்தியில் இயற்கை மீதான நேசம், மரம் வளர்ப்பில் ஆர்வம், 20 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதைத் தவிர்த்தல், மறு சுழற்சியின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் இந்த நாடகம் இருந்தது. இதில், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.