நாகப்பட்டினம், ஜூலை 3: மின் பற்றாக்குறையால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்படாமலிருக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார் மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி, மின் விநியோகம் ஆகியவற்றில் எவ்வித குறையும் ஏற்படாத வகையில், தொடர்புடைய துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்த வேண்டும். குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டால் அல்லது மோட்டார்களில் பழுது ஏற்பட்டால் அதை உடனுக்குடன் சீர்செய்ய வேண்டும். தெருவிளக்குப் பழுதுகளை உரிய வகையில் கண்காணித்து சீரமைக்க மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப் பணிகளில் எவ்வித கால தாமதத்துக்கும் இடமளிக்காமல், பணிகளை விரைந்து நிறைவேற்ற முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் அமைச்சர்.
மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி. மகாலிங்கம் (கீழ்வேளூர்), எஸ். பவுன்ராஜ் (பூம்புகார்), ம. சக்தி (சீர்காழி), நாகை நகர்மன்றத் தலைவர் ஆர். சந்திரமோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ச. நாமகிரி, நாகை வருவாய்க் கோட்டாட்சியர் வே. மணிகண்டன், நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரியம், மின் வாரியம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.