காரைக்கால், ஜூலை 3: உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு வாக்காளர் சேர்ப்பு, சரிபார்ப்புப் பணிகளை முடிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக காரைக்கால் மாவட்ட துணைத் தலைவர் ஜி.எம். முத்துசாமி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை மூலம் வழங்கப்படும் மண்ணெண்ணெய் தொகுப்பு குறைக்கப்பட்டுள்ளதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை புதுவை அரசு உடனடியாகச் சீர்செய்ய வேண்டும்.
கடந்த ஆட்சியின் போது, வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வேலை அளிக்காமல், அரசே நேரடியாக ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கிவிட்டு, தற்போது இவர்களை பணி நீக்கம் செய்துள்ளதை பாஜக கண்டிக்கிறது.
அரசு வேலையை இழந்தவர்களின் குடும்பச் சூழலைக் கருத்தில்கொண்டு புதுவை அரசு அனைவருக்கும் மீண்டும் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்குள் புதிதாக வாக்காளர் சேர்ப்பு மற்றும் சரிபார்ப்புப் பணிகளை விரைந்து முடித்து, தயார் நிலையில் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
புதுவையில் அமைச்சர்களாகப் பதவியேற்றவர்ளுக்கு காலதாமதமாக துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், காரைக்காலில் பல்வேறு அரசுத் துறைகளின் செயல்பாடுகள் முடங்கிவிட்டன. பல இடங்களில் குடிநீர்த் தொட்டி கட்டப்பட்டு மின் இணைப்பு தரப்படாததால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மேலஓடுதுறை கிராம மக்கள் 2 ஆயிரம் பேர் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, இதில் பொதுப் பணித் துறை உரிய கவனம் செலுத்த வேண்டும்.