காரைக்கால், ஜூலை 3: காரைக்காலில் நலிந்திருக்கும் விவசாயத்தை என்.ஆர். காங்கிரஸ் அரசில் வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் மு. சந்திரகாசு மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
புதுவை யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, யேனாம் ஆகிய 4 பிராந்தியங்கள் உள்ளன. ஒவ்வொரு அரசு அமையும் போதும் அந்தந்த பிராந்தியங்களின் வளர்ச்சிக்கு, அங்கு தேர்வான ஆளும் கட்சியைச் சேர்ந்தோருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு வருகிறது.
புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் காரைக்கால், இப்போது, தொழில்நகரமாகவும் உருவெடுத்து வருகிறது. காரைக்காலில் விவசாயத்தை மேலும் மேம்படுத்தவும், பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே காரைக்கால் வடக்குத் தொகுதி காங்கிரஸ் பேரவை உறுப்பினர் வி. கோவிந்தராஜன் புதுவை வேளாண் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, காரைக்காலில் வேளாண் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு தற்போது செயல்பட்டு வரும் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய அமைச்சர் கோவிந்தராஜன் காரணமாக இருந்தாராம்.
தொடர்ந்து, 1990 ஆம் ஆண்டில் திருநள்ளாறு தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஆர். கமலக்கண்ணன் வேளாண் அமைச்சராகப் பதவியேற்றார். இவர் இந்தப் பதவியில் 10 மாதங்கள் மட்டுமே இருந்தாலும், முற்போக்குச் சிந்தனையுடன் பல விவசாயத் திட்டங்களை கொண்டு வர முயற்சித்தார்.
இந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் என். ரங்கசாமி தலைமையிலான அரசில் காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற மு. சந்திரகாசுவுக்கு வேளாண் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது காரைக்கால் விவசாயிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெற்களஞ்சியம் எனப் பெயர் பெற்ற காரைக்காலில் தற்போது சுமார் 5 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. விளைநிலம் குறைந்துள்ள நிலையில், இந்தத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு, அதிக மகசூலைப் பெறும் முயற்சியை அமைச்சர் சந்திரகாசு முன்னெடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து காரைக்கால் பிரதேச விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் பி. ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
காரைக்கால் விவசாயிகளை அமைச்சர் அழைத்துப் பேச வேண்டும். அதிகாரிகளையும் வைத்துக்கொண்டு கோரிக்கைகளை அவ்வப்போது நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நலனுக்கும், குடிநீர் தேவைக்கும் காரைக்கால் மாவட்டத்தில் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 6 இடங்களில் உடனடியாகப் புதிதாக ஏரிகளை வெட்ட வேண்டும்.
நல்லம்பல் ஏரியை முழுமைப்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதன்மூலம், விவசாயிகளுக்குத் தேவையான நேரத்தில் தண்ணீர் கிடைக்கும். உப்புநீர் மாறி நல்ல குடிநீர் காரைக்கால் பகுதியில் கிடைக்கும் என்றார் அவர்.