அரியலூர், ஜூலை 3: அரியலூர் மாவட்டத்தில் காவல் துறையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் கடந்த 3 நாள்களில் மட்டும் 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) ரூபேஸ்குமார் மீனா உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள அரியலூர், ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, திருமானூர், கீழப்பழூர், வெங்கனூர், செந்துறை, இரும்புலிக்குறிச்சி, தளவாய், உடையார்பாளையம், கயர்லாபாத், தா. பழூர், விக்கிரமங்கலம் உள்ளிட்ட 16 காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் அந்தந்தக் காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் தலைமையில் தினமும் இரவு நேரங்களில் போஸீஸôர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
மதுபோதையில், அதிவேகமாக, அதிகளவில் சுமைகளை ஏற்றி, கண்கூசும் வகையில் முகப்பு விளக்குகளுடன், தலைக்கவசம் இல்லாமல், வாகன உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டிகள் மீது போலீஸôர் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை நடைபெற்ற சோதனையில் மாவட்டத்தில் 3 நாள்களில் 273 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் 77 பேர் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும், 41 பேர் போதையில் வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும், 41 பேர் அதிவேகமாக வாகனத்தை ஓட்டிச் சென்றதாகவும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதுபோன்ற சோதனைகள் தொடரும் என மாவட்டக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.