பெரம்பலூர், ஜூலை 3: தமிழ்நாட்டில் தேர்வு பட்டியலில் உள்ள 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டுமென பட்டதாரி ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பெரம்பலூரில், வேலையில்லா பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் கு. அழகமுத்து தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் பொன். ஆனந்தராஜ் கோரிக்கைகளை விளக்கினார்.
கூட்டத்தில், தமிழக முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவிப்பது. தேர்வுப் பட்டியலில் உள்ள 5 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்த்து முடித்துள்ள பட்டதாரிகளை, நிகழ் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் பின்பற்றிய பதிவு மூப்பு அடிப்படையில், வரும் காலத்திலும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் 45 வயது அடைந்தவர்களாக உள்ளனர். எனவே, அவர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் வாழ்வாதாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். சு.தமிழ்வாணன் வரவேற்றார். செயலர் டி.வேலுச்சாமி நன்றி கூறினார்.