ஆலங்குடி, ஜூலை 9: ஆலங்குடியில் தனியார் கட்டடத்தில் இயங்கும் குற்றவியல் நீதிமன்றத்தையும், பிற அரசு அலுவலகங்களையும் காலியாக உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு இடம் மாற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஆலங்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் நகரக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகளைக் கொண்டுவராமல் பாதி வழியிலேயே திரும்பிச் செல்லும் ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலங்குடி, வடகாடு முக்கத்திலிருந்து, பேருந்து நிலையம் வரை உள்ள சாலையைச் சீரமைக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒதுக்குப்புறமாக செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
வடகாடு முக்கத்தில் பயணிகள் நிழல்குடையை விரிவுபடுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 19-ல் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் ஆர். சொர்ணக்குமார் தலைமை வகித்தார். நிர்வாகிகள் மா. தர்மன், எம்.என். முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.