கும்பகோணம், ஜூலை 9: நிதிநிலை அறிக்கைக்கு முன் வர்த்தகச் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு செய்ய வேண்டும் என்று சேம்பர் ஆப் காமர்ஸ் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் சேம்பர் ஆப் காமர்ஸ் செயலர் பி.கே.டி. சண்முகம் வெளியிட்ட அறிக்கை:
அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு பல்வேறு இனங்கள் மூலம் பல கோடி ரூபாய்களை வரியாக வழங்கி வரும் தொழில் வர்த்தகர்களின் வணிகம் தடையின்றி தொடரவும், வர்த்தகம் இடையூறின்றி மேலோங்கவும் தாங்கள் அதற்கேற்ப மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தொழில் வர்த்தகர்கள் ஆதரவாய் இருப்பார்கள் என்று உறுதி கூறுகின்றோம்.
தமிழகத்தின் 2011- 12 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்படயிருப்பதால், அதற்கு முன்பாகவே தமிழக தொழில் வர்த்தகச் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
இதன்மூலம் அரசுக்கும், தொழில் வர்த்தகர்களுக்கும் இடையே இணக்கமான நட்புறவுக்கு வழி ஏற்படுத்தும்
எனப் பெரிதும் நம்புகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.