புதுக்கோட்டை, ஜூலை 9: புதுக்கோட்டை அரசுத் தலைமை மருத்துவமனையில் தமிழக ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அங்குள்ள பிரேதப் பரிசோதனை அறையில் ரூ. 3.6 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் முடிவுற்ற நிலையில், மீதமுள்ள சிறு, சிறு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து, அவசரச் சிகிச்சை பிரிவு, இதய மருத்துவப் பிரிவு, குழந்தைகள் பிரிவு ஆகிய பகுதிகளைப் பார்வையிட்ட அமைச்சர், அங்கு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
பார்வையாளர்கள் தங்கும் பகுதியில் உள்ள மேற்கூரையின் ஒரு பகுதி இல்லாத நிலை குறித்தும், சிடி ஸ்கேன் பிரிவில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் குறித்தும் பொதுமக்கள் அமைச்சரிடம் முறையிட்டனர்.
இந்தக் குறைகளை அடுத்த வாரத்துக்குள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.
மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ஜி. எட்வின், இருக்கை மருத்துவர் எஸ். ரவி, அறுவைச் சிகிச்சை நிபுணர் சு. எழிலரசன், பொதுப் பணித் துறை அதிகாரி ஆரோக்கியசாமி, கட்சி நிர்வாகிகள் க. பாஸ்கர், ஜெயகுமார், ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.