புதுக்கோட்டை, ஜூலை 9: வேலை வாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற தகுதியுடை இளைஞர்கள், மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ப. மகேஸ்வரி.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பள்ளி இறுதி வகுப்பு தோல்வி மற்றும் பட்டதாரி கல்வித் தகுதி வரை தேர்ச்சிப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிந்து எந்தவித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை அளிக்கப்படுகிறது.
இந்த உதவித் தொகையைப் பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 50,000-க்கு மிகாமலும், வயது வரம்பு 30.6.2011 நிலவரப்படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
மனுதாரர், தனது பள்ளி அல்லது கல்லூரி படிப்பை தமிழகத்திலேயே முடித்திருக்க வேண்டும். பெற்றோர் அல்லது கணவர் அல்லது மனைவி குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும்.
அரசு அல்லது தனியார்த் துறை அல்லது எவ்வித ஊதியம் பெறும் பணியிலோ இருத்தல் கூடாது. முற்றிலும் வேலையில்லாதவராக இருத்தல் வேண்டும். கல்வி நிறுவனங்களில் அன்றாடம் பயிலும் மாணவ, மாணவியராக இருத்தல் கூடாது. உதவித் தொகை பெறும் காலத்தில் பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
இந்தத் தகுதிகள் உள்ள 30.6.2006-ம் தேதிக்கு முன் (5 ஆண்டுகள் முடிவுற்ற) வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவை தொடர்ந்து புதுப்பித்துவருபவர்கள், அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்புப் பதிவு அட்டை ஆகியவற்றுடன் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து உதவித் தொகைக்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பள்ளியிறுதி வகுப்புக்குக் கீழ் மற்றும் அதற்கு மேல் உள்ள கல்வித் தகுதிகளை 30.6.2010-க்கு முன்னர் பதிவு செய்த மாற்றுத் திறனாளிகள் தங்களது கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்புப் பதிவு அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, உடல் குறைபாடுகளுக்கான மருத்துவச் சான்றிதழின் நகல் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களது பெயரில் சேமிப்பு கணக்கு துவங்கிய வங்கிப் புத்தகம் ஆகியவற்றுடன் நேரில் வந்து உதவித் தொகைக்கான படிவத்தை இலவசமாகப் பெற்று, உடன் பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றார் அவர்.