அரியலூர், ஜூலை 14: தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, அரியலூர் மாவட்ட திமுக சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அரியலூர் மாவட்ட திமுக செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ். சிவசங்கர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி அரியலூர் மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட உள்ளது.
வருகிற 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அரியலூர்- கல்லங்குறிச்சி சாலையில் உள்ள தாரணி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் இந்தப் போட்டிகள் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்குத் தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும்.
மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவருக்கு ரூ. 5,000, இரண்டாம் பரிசாக ரூ. 3000, மூன்றாம் பரிசாக ரூ. 2,000, ஆறுதல் பரிசாக தலா 1,500 வீதம் 5 பேருக்கும் வழங்கப்பட உள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் பரிசு இறுதிப் போட்டி நடைபெறும் நாள்களில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் வழங்கப்படும். மூன்றாம் மற்றும் ஆறுதல் பரிசு பெறுபவர்களுக்கு அஞ்சல் மூலமாக பரிசு அனுப்பிவைக்கப்படும்.
போட்டி குறித்த மேலும் விவரங்கள் தேவைப்படும் மாணவ, மாணவிகள் திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அறிவழகனை 98435-04029 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
போட்டியில் பாடல்களை ஒப்புவிக்க வேண்டுமே தவிர, இசை அமைத்தோ, ஒப்பனை அணிந்தோ பாடக் கூடாது. பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் தங்களது பகுதி பள்ளி, கலலூரி மாணவ, மாணவிகளைப் பங்கேற்கும் வகையில், அந்தந்த பகுதி திமுகவினர் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றார் அவர்.