திருச்சி, ஜூலை 14: திருச்சியில் நடைபெற்று வரும் ஆசிரியர் கல்விப் பட்டயப் படிப்பில் சேருவதற்கான மாநில அளவிலான கலந்தாய்வில் வியாழக்கிழமை 762 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
தமிழக அரசு, ஆசிரியர் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வு திருச்சி ஜங்ஷன் ஆர்.சி. மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சுந்தர்நகர் நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், பிராட்டியூர் ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில் நடைபெறுகிறது.
கடந்த 3 நாள்களாக நடைபெற்ற கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், தெலுங்கு, மலையாளம், உருது, ஆங்கிலம் என பிற மொழிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 309 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
4-ம் நாளான வியாழக்கிழமை தொழில்கல்வி, அறிவியல், கலை ஆகிய பாடப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆர்.சி. மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகிய இடத்திலும் நடைபெற்றது.
இதில் 1,451 மாணவர்களுக்கு கலந்தாய்வில் கலந்து கொள்ள கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இதில் தொழில்கல்வி பாடப் பிரிவில் 292 பேரும், அறிவியல் பாடப் பிரிவில் 221 பேரும், கலைப் பிரிவில் 269 மாணவர்களும் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
இதில் தொழில்கல்வி பாடப் பிரிவில் 282 பேரும், அறிவியல் பாடப் பிரிவில் 220 பேரும் கலைப் பாடப் பிரிவில் 260 பேரும் என மொத்தம் 762 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொழில்கல்வி, அறிவியல், கலை ஆகிய பாடப் பிரிவு மாணவிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.