மணப்பாறை, ஜூலை 14: சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உள்பட்ட கண்ணுடையான்பட்டி ஊராட்சிப் பகுதியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, உள்கட்டமைப்பு வசதிகள் ஏதுமின்றி ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் போலச் செயல்பட்டு வருகிறது.
திருச்சியிலிருந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டதையடுத்து, பல்வேறு போட்டிகளுக்கு இடையே முந்தைய அதிமுக ஆட்சியில் மணப்பாறையில் மாவட்ட மருத்துவமனை அமைக்க முடிவானது.
அதைத் தொடர்ந்து, மணப்பாறை - விராலிமலை சாலையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் ரூ. 3.56 கோடியில் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, கடந்த திமுக ஆட்சியின் போது, அப்போதைய துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் 22.10.2009 அன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையைத் திறந்துவைத்தார். ஆனால், மாவட்ட மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டதே தவிர, அந்தத் தரத்துக்கேற்ப மருத்துவச் சிகிச்சை இதுவரை கிடைக்கவில்லை என்று புகார் கூறுகின்றனர் பொதுமக்கள். தரமான கட்டடங்கள், போதிய இடவசதி இருந்தும் உரிய மருத்துவர்களும், நவீன சாதனங்களும் இல்லாததால், முறையான மருத்துவம் செய்ய இயலாத நிலை உள்ளது.
மருத்துவமனையில் தங்கியுள்ள நோயாளிகளுக்கும் - ஊழியர்களுக்கும் குடிநீர் வசதிகூட இல்லை. அனைத்துக் குடிநீர் கொள்கலன்களும் காலியாகவே உள்ளன. நோயாளிகளுக்குரிய கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளன. அமைக்கப்பட்ட ஆழ்குழாய்களில் போதிய தண்ணீர் இல்லை என்று கூறப்பட்டாலும், அதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் ஏதும் இல்லை. நகராட்சி நிர்வாகம் வழங்கும் ஒரு லாரி தண்ணீர்தான் மருத்துவமனையின் ஒரே நீராதாரம். இப்போதுதான் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள். இந்நிலையில், மணப்பாறை பகுதிகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளில் சிக்கி உயிருக்குப் போராடும் நிலையில் அழைத்து வரப்படுபவர்களுக்கு முதலுதவி மட்டும்தான் இந்த மருத்துவமனையில் செய்யப்படும். காரணம் மருத்துவர் பற்றாக்குறை ஒருபுறம், சி.டி. ஸ்கேன் வசதி இல்லாதது மறுபுறம். சாதாரண நோயாளிகளுக்கு எக்ஸ்ரே எடுப்பதற்குக்கூட திருச்சி மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.
மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதுநிலை மருத்துவர் உள்பட 31 பேர் பணியில் இருக்க வேண்டும். ஆனால், இந்த மருத்துவமனையில் 5 பேர் மகப்பேறு மருத்துவமனையிலும், 4 அல்லது 5 பேர் மட்டுமே அன்றாடப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும், புறநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் நேரம் முடிந்ததும் மருத்துவர்களைப் பார்ப்பது அரிதாகிவிடுகிறது. பகல் நேரங்களில் ஓரிருவர் மட்டுமே மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் இருப்பர். மிகக் குறைவான மருத்துவர்களைக் கொண்டு, ஆயிரக்கணக்கான புறநோயாளிகளுக்கும், நூற்றுக்கணக்கான உள் நோயாளிகளுக்கும் எப்படி செம்மையான மருத்துவச் சிகிச்சை வழங்க முடியும். திருச்சி - திண்டுக்கல் நான்கு வழிச் சாலை, திருச்சி - மதுரை நான்கு வழிச் சாலை ஆகிய இரண்டும் மணப்பாறை பகுதியைக் கடந்து செல்வதால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும், நவீன கருவிகள் ஏதும் இல்லாததால், காயமடைந்தவர்களை திருச்சி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் நிலைதான் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்டத் தலைமை மருத்துவமனை வளாகத்துக்குள் இருக்க வேண்டிய இணை இயக்குநர் அலுவலகம் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால், மருத்துவமனையில் நிலவும் சேவைக் குறைபாடு குறித்து பொதுமக்கள் புகார் கொடுக்க இயலவில்லை. மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையம் இல்லாததால், மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் உரிய பாதுகாப்பு வசதி இல்லை. விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்களை மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் அடிக்கடி போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து காவிரி இலக்கியப் பேரவையின் செயலர் வழக்குரைஞர் ஆ. தமிழ்மணி கூறியது:
மணப்பாறை பகுதியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனை அமைந்திருப்பது முதல்வர் தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதியில்தான். இதை முதல்வரின் தனிக் கவனத்துக்கு அதிகாரிகளும், ஆளும் கட்சிப் பிரமுகர்களும் எடுத்துச் சென்றிருந்தால், மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும்.
மாறாக, முந்தைய நிலையிலேயே மாவட்ட மருத்துவமனையின் செயல்பாடுகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு போதிய குடிநீர் வசதி இல்லை என்பதும், தேவையான மருத்துவர்கள் நியமிக்கப்படாததும் கவலைக்குரியது என்றார் அவர்.