திருச்சி, ஜூலை 14: திருச்சியில் சொத்து அபகரிப்பு வழக்கில், திமுக மலைக்கோட்டை பகுதிச் செயலர் மலைக்கோட்டை மதிவாணன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருச்சி திருவானைக்காவைச் சேர்ந்தவர் ஹேமமாலினி. இவரது கணவர் ஜெயசீலன், திருச்சி மாநகர திமுக மலைக்கோட்டை பகுதிச் செயலர் மு. மதிவாணனிடம் கடந்த 2007-ம் ஆண்டு ரூ. 22,00,000 கடனாக வாங்கியிருந்தாராம். இந்தத் தொகையில், 2,558 சதுர அடி இடத்தில் கட்டடம் கட்டி தொழில் செய்து வந்தாராம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜெயசீலன் தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து, அந்த இடத்தை ரூ. 76,54,000-க்கு விலை பேசி ஹேமமாலினியிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட மதிவாணன், கடன் தொகை ரூ. 22 லட்சம் போக, மீதித் தொகை 54,54,000 ரூபாயை கொடுக்காமல் சொத்தை அபகரித்துக் கொண்டாராம். பணத்தைக் கேட்டபோது கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுதொடர்பாக ஹேமமாலினி கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து, மாநகரக் காவல் ஆணையர் இ.மா. மாசானமுத்து உத்தரவின் பேரில், மதிவாணன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மதிவாணனுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது எண்ணிக்கை 4: திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததைத் தொடர்ந்து, திருச்சியில் திமுக பிரமுகர்கள் கைது செய்யப்படுவது தொடர்கிறது. இந்த வரிசையில் மதிவாணன் நான்காவது நபர். முதலில் திமுக மாவட்டத் துணைச் செயலர் குடமுருட்டி சேகர், கஞ்சா கடத்திச் சென்றபோது காவல் துறையினர் தடுத்ததால், அவர்களை கத்தியால் குத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, துறையூர் நகர திமுக பொருளாளர் செல்வம், திமுகவைச் சேர்ந்த திருச்சி மாநகராட்சி கோட்டத் தலைவர் ரெ. அறிவுடைநம்பி ஆகியோர் தனித்தனியே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.