அரியலூர், ஜூலை 14: அரியலூர் வாலாஜாநகரம் அருகிலுள்ள ராஜீவ்நகர் மக்கள் தங்கள் பகுதியில் தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும் எனக் கோரி புதன்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூரிலிருந்து, ஜயங்கொண்டம் சாலையில் மாவட்ட ஆட்சியரகம் அருகே அமைந்துள்ளது ராஜீவ்நகர். இந்தப் பகுதியில் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் திடீரென மின் தடை ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு ஏற்படும் மின் தடை பலமணி நேரம் நீடித்து வந்ததாம்.
இதனால், இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளில் மின் சாதனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் எடுத்துக் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தொடர் மின் தடை, தண்ணீர் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்த ராஜீவ்நகர் பகுதி மக்கள் புதன்கிழமை இரவு அரியலூர்- ஜயங்கொண்டம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், இந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர் வட்டாட்சியர் முத்து வடிவேலு, காவல் ஆய்வாளர் ஜோதி மகாலிங்கம் மற்றும் போலீஸôர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் உரிய தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.