திருச்சி, ஜூலை 14: திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என்றார் திருச்சி மாவட்ட திமுக செயலர் கே.என். நேரு.
இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
"திருச்சி மலைக்கோட்டை பகுதிச் செயலர் மதிவாணன் மீது பொய் வழக்குப் பதிந்து சிறையில் அடைத்த காவல் துறையின் அராஜக போக்கை திமுக கண்டிக்கிறது.
மதிவாணன் மீது, ஹேமமாலினி என்பவர் கொடுத்துள் புகாரில் எந்தவித முகாந்திரமும் இல்லை. திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, அதிமுகவினர் தூண்டுதல் பேரில், போலீஸôர் வேண்டும் என்றே பொய் வழக்கு பதிந்துள்ளனர்.
திமுகவினரை மிரட்டுவதற்காக காவல் துறையினர், ஆளுங்கட்சியின் கைக்கூலியாகச் செயல்பட்டு, நில மோசடியில் ஈடுபட்டதாக நடவடிக்கை எடுத்துள்ளதை திமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மாவட்டக் கழகப் பொருளாளர் கே.கே.எம். தங்கராஜாவின் சகோதரர் கே.கே.எம். மூர்த்தி, மாவட்டக் கவுன்சிலர் பி.ஆர். சிங்காரம், பகுதி செயலர் காஜாமலை விஜய் மற்றும் திமுகவினர் மீது பொய் வழக்குப் பதிய முயற்சி செய்யும் காவல் துறையினரின் அராஜகப் போக்கை திமுக கண்டிக்கிறது.
இதை சட்டப்படி சந்திக்க திமுக வழக்குரைஞர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்' என்று அந்த அறிக்கையில் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.