திருச்சி, ஜூலை 14: திருச்சி மாநகரிலுள்ள அனைத்து வகையான கடைகளிலும் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக தொழிலாளர் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) எஸ். சுந்தரராஜ் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் மாநகரில் திடீர் ஆய்வு நடத்தினர்.
காய்கறிக் கடைகள், பழக் கடைகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், தெருவோரக் கடைகள் ஆகியவற்றில் எடையளவு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் உரிய காலங்களில் மறு முத்திரையிடாத மின்னணு தராசுகள் 25, மேடைத் தராசுகள் 5, மேஜைத் தராசுகள் 6, ஊற்றல் அளவைகள் 30, விட்டத் தராசுகள் 20, எடைக் கற்கள் 163, தரமற்ற படிகள் 3 ஆக மொத்தம் 256 எடையளவு இனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உரிய அறிவிப்பில்லாத பொட்டலப் பொருள்கள் 5 பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆய்வில் 736 வணிகளிடம் மேற்கொள்ளப்பட்டு, 18 வழக்குகள் தொடரப்பட்டன.