திருவாரூர், ஜூலை 14: தமிழ்நாடு வனத் துறையின் திருவாரூர் மாவட்ட வனவியல் விரிவாக்கப் பிரிவு சார்பில் மூங்கில் சாகுபடி கருத்தரங்கம் திருவாரூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைமை வகித்து, மூங்கில் சாகுபடியின் பயன்கள் குறித்த கையேட்டை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் ச. முனியநாதன் பேசியது:
வட இந்தியாவில் அதிக அளவில் மூங்கில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, அசாம் போன்ற மாநிலங்களில் மூங்கில் அங்குள்ள மக்களின் வாழ்க்கையோடு மூங்கில் இரண்டறக் கலந்துள்ளது. மூங்கில்களைக் கொண்டு 250-க்கும் மேற்பட்ட நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருள்கள் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.
நமது மாவட்டத்தில் அதிக அளவில் நெல் பயிரிடப்படுகிறது. மாற்றுப் பயிர் சாகுபடியில் ஈடுபட விரும்பும் விவசாயிகளுக்கு மூங்கில் சாகுபடி நல்ல லாபம் தரும் பயிராகும். மேலும் இதில் ஊடுபயிர்களும் சாகுபடி செய்யலாம். முள் இல்லாத மூங்கில் போன்ற பல்வேறு ரகங்கள் இங்கு உள்ளன.
மூங்கில்கள் முன்பு வீடுகள் கட்டவும், பல்வேறு கட்டுமானப் பணிகளுக்குமே பயன்பட்டு வந்தன. ஆனால் இன்று ஏராளமான கைவினைப் பொருள்கள் மூங்கில்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. இயற்கை சீற்றங்களால் அதிக அளவு பாதிக்காத பயிர் மூங்கில்.
விவசாயிகளுக்கு மூங்கில் சாகுபடியின் தொழில்நுட்பங்கள், அதன் பயன்கள், சாகுபடி செலவு, அதன் வருமானம் ஆகியவை குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விளக்கமளிக்கப்படும். விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு மூங்கில் சாகுபடியை அதிக அளவில் மேற்கொண்டு, அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்றார் ஆட்சியர்.
கருத்தரங்கில் மாவட்ட வன அலுவலர் எம். குருசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் கே. இளங்கோவன், வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) என். கபிலன், வன விரிவாக்க அலுவலர் ஆர்.ஆர். ராஜசேகரன் உள்ளிட்டோர் பேசினர்.