நாகப்பட்டினம், ஜூலை 14: நாகையில் திராவிட மாணவர் கழக இன எழுச்சி மாநாடு வருகிற ஆக. 13-ம் தேதி நடைபெறுகிறது என்றார் தி.க. தலைமை நிலையச் செயலர் வீ. அன்புராஜ்.
நாகையில் திராவிட மாணவர் கழக இன எழுச்சி மாநாட்டு அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தி.க மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி. அழகப்பன் தலைமை வகித்தார்.
தி.க. தலைமை நிலையச் செயலர் வீ. அன்புராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மாநாட்டு அலுவலகத்தைத் திறந்துவைத்துப் பேசியது:
மாணவர்களை போதை பழக்கங்களிலிருந்தும், மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுபடச் செய்து, அறிவியல் சார்ந்த மனப்பான்மையை உருவாக்குவது, சமச்சீர் கல்வியை அமல்படுத்த மறுக்கும் தமிழக அரசைக் கண்டிப்பது. சமச்சீர் கல்வியில் நீதிக் கட்சி வரலாறு இடம் பெறக் கூடாது எனக் கூறிய நிபுணர் குழுவின் முடிவை கண்டிப்பது என்பன உள்ளிட்ட கருத்துகளை முன்னெடுத்து, நாகையில் திராவிட மாணவர் கழக இன எழுச்சி மாநாடு ஆக. 13-ல் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசுகிறார்.
தமிழின எழுச்சிக்காக திராவிடர் மாணவர் கழகம் நடத்தும் இந்த மாநாட்டில் தமிழர்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.
துணைப் பொதுச் செயலர் இரா. குணசேகரன், மாநில இளைஞரணிச் செயலர் இரா. ஜெயக்குமார், மாநில மாணவரணி துணைச் செயலர்கள் மு. சென்னியப்பன், ம. திராவிட எழில், மண்டலத் தலைவர் எஸ்.எஸ். மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.