பட்டுக்கோட்டை, ஜூலை 14: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தாய், 3 மகள்கள் அதிக தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர்.
பட்டுக்கோட்டை அல்லாகோயில் தெருவைச் சேர்ந்த வாடகைக்கார் ஓட்டுநர் கனகராஜ் (48). இவர் மனைவி முத்தரசி (42). இவர்களுக்கு இந்துஜா (17), அஸ்வினி (15), அர்ச்சனா (12) ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் இந்துஜா 900-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அஸ்வினி 10-ம் வகுப்பு, அர்ச்சனா 7-ம் வகுப்பு படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்துஜா கல்லூரியில் சேர்ந்து படிக்க விரும்பினாராம். ஆனால், அவரது தந்தை கனகராஜ், சம்பாதிக்கும் பணத்தை மது குடித்து பயனற்ற வகையில் செலவழித்து வந்ததால், அவரால் கல்லூரியில் சேர முடியவில்லையாம்.
இதனால் விரக்தியடைந்த தாய் முத்தரசியும், மகள்கள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, வியாழக்கிழமை அதிகாலை அதிக தூக்க மாத்திரைகளை விழுங்கினராம்.
இதில் மயக்கமடைந்த 4 பேரும் ஆபத்தான நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தீவிரச் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பட்டுக்கோட்டை நகரக் காவல் நிலைய போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.