பெரம்பலூர், ஜூலை 14: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்துகொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஷ் அஹமது.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல் மற்றும் இரண்டாம் போக நெல், மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கும், மஞ்சள், வெங்காயம், வாழை உள்ளிட்ட தோட்டப் பயிர்களுக்கும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனம் மூலம் தேசிய வேளாண் பயிர்க் காப்பீடு செய்யப்படுகிறது. இதில் பயிர்க் காப்பீடு செய்தால், இயற்கைச் சீற்றங்களால் (வெள்ளம், வறட்சி, பூச்சி மற்றும் நோய்கள்) ஏற்படும் மகசூல் இழப்புக்கு காப்பீடுத் தொகை பெறலாம். இந்தத் திட்டத்தில் குத்தகைதாரர் உள்பட அனைத்து விவசாயிகளும் (வங்கி கடன் பெறுவோர் மற்றும் பெறாதவர்) சேர்ந்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தில் சராசரி மகசூலுக்கு 150 சத மதிப்பு வரை காப்பீடு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரம், பிர்கா உள்ளிட்டவற்றில் மாநில அரசின் விவசாயத் துறையினரால் பயிர் அறுவடை காலத்தில் 16 அல்லது 10 பயிர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பருவத்தின் சராசரி மகசூலைக் கடந்த மூன்று அல்லது 5 ஆண்டுகால உத்தரவாத மகசூலோடு ஒப்பிடும்போது, நிகழ் பருவத்தில் எவ்வளவு குறைந்துள்ளதோ, அந்த விகிதப்படி சம்பந்தப்பட்ட வட்டாரத்தில் உள்ள காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், அவரவர் தொகைக்கு ஏற்ப நஷ்ட ஈடு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற மாவட்ட வேளாண் இணை இயக்குநர், மாவட்டத் தோட்டக்கலைத் துறைத் துணை இயக்குநர் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர், தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம் என்றார் அவர்.