பூதலூர் அருகே ஒரு செடியில் 170 உளுந்துகாய்கள்: விவசாயிக்கு பாராட்டு

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 14: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே ஒரு உளுந்து செடியில் 170 காய்கள் விளைந்துள்ளதை அடுத்து, அதை பயிரிட்ட விவசாயிக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.  ஆண்டுதோறும் உ
Published on
Updated on
2 min read

திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 14: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே ஒரு உளுந்து செடியில் 170 காய்கள் விளைந்துள்ளதை அடுத்து, அதை பயிரிட்ட விவசாயிக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

 ஆண்டுதோறும் உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் தமிழக அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக மாவட்ட, மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப் பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

 மாநில அளவில் தேர்வு செய்யப்படும் விவசாயிக்கு முதல் பரிசாக ரூ. 25,000, 2-வது பரிசாக ரூ. 15,000, மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 15,000, 2-வது பரிசாக ரூ. 10,000 வழங்கப்படுகிறது.

 நிகழாண்டு, பூதலூர் ஒன்றிய வேளாண் விரிவாக்க மையத்துக்கு உள்பட்ட திருக்காட்டுப்பள்ளி, புதுச்சத்திரம், திருச்செணம்பூண்டி, கோவிலடி, பாதிரகுடி, இளங்காடு, முல்லைக்குடி, ஓமக்குலம், விஷ்ணம்பேட்டை, பவனமங்கலம், கூத்தூர் மைக்கேல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,100 ஹெக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடி கடந்த ஆண்டைவிட 10 சதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 உளுந்து அறுவடை செய்யும் விவசாயிகள் அதுகுறித்து வேளாண் விரிவாக்க மையத்தில் தெரிவித்தவுடன், மாநில, மாவட்ட உளுந்து மகசூலை ஆய்வு செய்யும் குழுவினர் அறுவடையை ஆய்வு செய்து அதிக மகசூல் பெற்ற விவசாயியை தேர்வு செய்வர்.

 மாநிலத் தேர்வுக் குழு உறுப்பினராக திருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த வேளாண் அலுவலர் பி.எம். அல்லா பாகாஷ், மாவட்ட அளவிலான குழுவில் திருக்காட்டுப்பள்ளியை அடுத்த ஆற்காடு விவசாயி சுந்தர், சித்திரக்குடி பகுதியின் சிறப்பு விவசாயி சந்திரசேகரன், பூதலூர் வேளாண் விரிவாக்க மைய அலுவலர்கள் காமராஜ், பெரியராஜ், கோபிநாதன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

 இந்தக் குழுவினர் பூதலூரை அடுத்த முல்லைக்குடி ஓமக்குலத்தைச் சேர்ந்த விவசாயி ம. ராஜேந்திரனின் வயலில் தங்களுடைய கண்காணிப்பில் உளுந்து பயிர் அறுவடையை ஆய்வு செய்தனர்.

 இந்த வயலில் பயிர் செய்யப்பட்ட உளுந்து பயிர்களில் சுமார் 40 சதம் செடிகளில் 150 முதல் 170 உளுந்து காய்கள் காய்த்திருந்ததைக் கண்டு ஆய்வுக் குழுவினர் ராஜேந்திரனைப் பாராட்டினர்.

 இதுகுறித்து பூதலூர் வேளாண் விரிவாக்க மைய உதவி வேளாண் அலுவலர் கோபிநாதன் கூறியது:

 பூதலூர் ஒன்றியத்தில் உளுந்து பயிரில் பெறப்படும் மகசூல் குறித்து கடந்த 10 நாள்களாக ஆய்வு செய்து வருகிறோம். பூதலூர் ஒன்றியத்தில் தேர்வு செய்யப்படும் விவசாயிகள் பிறகு மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடமிருந்து பரிசு பெறுவார்கள்.

 பரிசு பெற விரும்பும் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் தமிழக அரசு வேளாண் விரிவாக்க மையங்களில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ அறுவடை குறித்து தெரிவித்தால், தேர்வுக் குழுவினர் அறுவடையை ஆய்வு செய்து பரிசுக்கான விவசாயியை தேர்வு செய்வார்கள்.

 மேலும் விவரங்களுக்கு 90473 61490 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.