திருச்சி, ஜூலை 14: இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளிலேயே செயல்படுத்த வேண்டும் என்றார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்.
திருச்சியில் வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
கச்சத்தீவில் வரும் ஆகஸ்ட்
ஸ்15-ம் தேதி இந்திய விடுதலை நாள் விழாவை தேசியக் கொடியேற்றிக் கொண்டாடவுள்ளோம். மத்திய, மாநில அரசுகளின் சார்பில் கொடியேற்றும் விழா நடத்தப்பட்டால், எங்கள் நிகழ்ச்சியை ரத்து செய்துவிடுவோம்.
வரும் ஜூலை 23-ம் தேதி தனித் தமிழ்ஈழத்தை இந்திய அரசு உருவாக்கித் தர வேண்டும் என வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியின் சார்பில் அமர்நாத் புனித யாத்திரை மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து 28-ம் தேதி தீண்டாமை இருள் அகற்றும் தீபத்திருவிழா தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நடத்தப்படும். இரட்டைக் குவளை உள்ளிட்ட தீண்டாமை இழிவுகளை ஒழிக்கும் நோக்கத்தில் இந்து சமயத் துறவிகள் பிரசாரம் மேற்கொள்வர்.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ராஜிநாமா செய்ய வேண்டும். பயங்கரவாதத்தையும், சிறுபான்மையினர் நலனையும் பிரித்துப் பார்க்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளைக் கோருகிறோம்.
தமிழ்நாட்டில் இலவச ஆடு, மாடுகள் வழங்கும் திட்டம் சிறப்பான திட்டம். இலவசமாக மின்விசிறி, கிரைண்டர், மிக்ஸி வழங்கும் திட்டம் தேவையற்றது. எனவே, இதை நிறுத்திவிட்டு இந்தத் தொகையை ஆடு, மாடு வழங்கும் திட்டத்துக்கே செலவிட வேண்டும்.
இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசு சார்ந்த காப்பீட்டு நிறுவனங்கள், அரசு மருத்துவமனைகளிலேயே செயல்படுத்த வேண்டும். தனியார் என்று நுழைந்தாலே அது லாபநோக்கம் கொண்டதாக மாறிவிடும். ஊழலுக்கு வழிவகுத்துவிடும்.
என் மனைவி கிறிஸ்தவராக மாறிவிட்டார் என நித்யானந்தா கூறியிருக்கிறார். அது தவறான தகவல்.
நித்தியானந்தா மீதான வழக்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் வென்று குற்றமற்றவர் என்று நிரூபித்துவிட்டு வெளியே வரட்டும். அவரை நாங்களும் கொண்டாடத் தயாராக உள்ளோம்' என்றார் அர்ஜுன் சம்பத்.
பேட்டியின்போது, இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் பால்ராஜ்சாமி, இந்து மகாசபையின் அமைப்பாளர் ராகவன், காரைக்கால் அம்மையார் அறக்கட்டளை அமைப்பாளர் சிவ. தங்கவேல் ஆகியோர் உடனிருந்தனர்.