பெரம்பலூர், ஜூலை 14: பெரம்பலூர் மாவட்டத்தில் மறு முத்திரையிடாத 23 தராசுகள் மற்றும் 49 எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் என். மதிவாணன்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை தொழிலாளர் ஆணையர் உத்திரவின்படி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் தரேஷ் அகமது அறிவுறுத்தலின் பேரில், திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் மற்றும் தொழிலாளர் இணை ஆணையர் மேற்பார்வையில், பெரம்பலூர் தொழிலாளர் நலத் துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) என். மதிவாணன் தலைமையில், பெரம்பலூர் தொழிலாளர் துணை ஆய்வாளர் கி. பழனி, உதவி ஆய்வாளர் மு. பாஸ்கரன், அரியலூர், முசிறி உதவி ஆய்வாளர்கள் வி. சேதுமாதவன், க. ராஜசேகரன் உள்ளிட்டோர் எடைக் கற்கள் பயன்படுத்தும் கடைகளில் அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மறு முத்திரை இடப்படாத 23 தராசுகள் மற்றும் 49 எடைக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய காலத்தில் மறு முத்திரை இடாதவர்கள், உடனடியாக மறு முத்திரை இட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு மறு முத்திரை இடாமல் இருப்பது கண்டறியப்பட்டால், 2009-ம் ஆண்டு எடைகள் அளவைகள் சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு எடை அளவுகள் (அமலாக்கம்) விதிகளின்படி, குறைந்த பட்சம் ரூ. 500 முதல் அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல, 2011-ம் ஆண்டு எடை அளவுகள் (பொட்டலப் பொருள்) விதியின் கீழ், உரிய முறையில் அறிவிப்புகளுடன் பேக்கிங் செய்து விற்பனை செய்யாதது கண்டறியப்பட்டால், குறைந்தபட்சம் ரூ. 2 ஆயிரத்து 500 முதல் அதிக பட்சமாக ரூ. 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இந்தச் சட்டம் மற்றும் விதிகள் 01.04.2011 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.