துறையூர், ஜூலை 14: துறையூர் நகராட்சியில் குடிநீர் இணைப்புப் பெற்று, மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுபவர்களின் இணைப்பு 18 ஆம் தேதிக்குப் பின்னர் நிரந்தரமாகத் துண்டிக்கபடும் என்று ஆணையர் சி. மதிவாணன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
துறையூர் நகராட்சி மக்கள் தொகைக்கேற்ப காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் கீழ் குடிநீர் வடிகால் வாரியத்திடம் லட்சம் லிட்டர் பெற்று நகராட்சி மூலம் நகர மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
போதுமான அளவு வழங்கியும் ஆங்காங்கே குடிநீர் கிடைக்கவில்லை என்ற புகார்கள் வருகின்றன. இவ்வாறு புகார் கொடுப்பவர்கள் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சுவதால்தான் இந்தப் பற்றாக்குறை எழுகிறது.
எனவே, மின் மோட்டார்களை வைத்து தண்ணீர் பிடிப்பவர்கள் அதை 18 ஆம் தேதிக்குள் அகற்றிட வேண்டும்.
18 ஆம் தேதிக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் ஆய்வில் யாராவது மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவதைக் கண்டறிந்தால், அவர்களது மின் மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதோடு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், குடிநீர் இணைப்பும் நிரந்தரமாகத் துண்டிக்கப்படும்.
மின் மோட்டார் மூலம் யாராவது குடிநீர் எடுப்பதாக தெரிந்தால், பொதுமக்கள் நேரிடையாகவோ அல்லது ஆணையர், நகராட்சிப் பொறியாளர் கைப்பேசிக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு - ஆணையர் 99628 - 12385, பொறியாளர் 94433 - 94643.