அறந்தாங்கி, ஜூலை 23: அறந்தாங்கியில் அனைவருக்கும் கல்வித் திட்டம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் புலமை பயிற்சி வகுப்புகள் அண்மையில் நடைபெற்றன.
அறந்தாங்கி வட்டார வளமையத்திற்குள்பட்ட 6, 7, 8 ஆம் வகுப்புகளில் ஆங்கிலம் கற்பிக்கும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஜூலை 19 முதல் 22 வரை முதல் கட்டமாக எல்.என். புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, நகராட்சி (கிழக்கு) தொடக்கப் பள்ளி ஆகிய இரு மையங்களில் நடைபெற்றது.
பயிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சு. மதியழகன் தொடக்கி வைத்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் இரா. இளங்கோ, வெ. வீரையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியப் பயிற்றுநர்கள் வி. முத்துராஜா, அ. பழனியப்பன், டி. பரமசிவம், எஸ். செந்தில்குமார் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர். இந்தப் பயிற்சியில் 64 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
முன்னதாக, ஆசிரியர் பயிற்றுநர் எம். கோவிந்தராஜன் வரவேற்றார். பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ரேணுகா, அனுசுயா நன்றி கூறினர்.