ஆசிரியர் கல்வி கலந்தாய்வு: 6,000 பேருக்கு சேர்க்கை ஆணை

திருச்சி, ஜூலை 23: திருச்சியில் நடைபெற்று வந்த மாநில அளவிலான ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் சுமார் 6,000 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டன. தமிழகத்தில் 682 அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர
Published on
Updated on
2 min read

திருச்சி, ஜூலை 23: திருச்சியில் நடைபெற்று வந்த மாநில அளவிலான ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்புக்கான கலந்தாய்வில் சுமார் 6,000 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 682 அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், அரசு ஒதுக்கீடு அடிப்படையில் 19,368 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திருச்சியில் தமிழக அரசு, ஆசிரியர் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்ககம் சார்பில் ஜூலை 11 முதல் ஜூலை 23 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 1,620 மாணவர்கள், 10,746 மாணவிகள் என மொத்தம் 12,366 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இவர்களில் 12,318 பேர் கலந்தாய்வில் பங்கேற்றனர். மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் போன்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 11, 12 ஆம் தேதிகளில் நடைபெற்றது.

இதையடுத்து, பிற மொழிகளில் பயில்வோருக்கான கலந்தாய்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது.

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், ஜூலை 14 ஆம் தேதி ஒரே நாளில் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மாணவிகளுக்கான கலந்தாய்வு மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. இதில் தொழில் கல்வி பாடத்துக்கான கலந்தாய்வு ஜூலை 21 ஆம் தேதியும், கலைப் பாடத்துக்கான கலந்தாய்வு ஜூலை 22 ஆம் தேதியும் நிறைவடைந்தது.

இறுதி நாளான சனிக்கிழமை (ஜூலை 23) அறிவியல் பாடப் பிரிவுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள 482 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இவர்களில் கலந்து கொண்ட 204 பேரில் 181 பேர் சேர்க்கை ஆணை பெற்றனர்.

இடையில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக 12 நாள்கள் நடைபெற்ற கலந்தாய்வில் விண்ணப்பம் செய்த பெரும்பாலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டாலும், 6,000 பேர் மட்டுமே சேர்க்கை ஆணை பெற்றனர்.

குறைவுக்கு காரணம்?:

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ஓரிரு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் வேலைவாய்ப்பு கிடைத்தது. ஆனால், இப்போது அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இப்போது படித்து முடித்து வெளியே வருபவர்களுக்கு 10 ஆண்டுகள் கழித்துதான் அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற கருத்து மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளாக ஆசிரியக் கல்வி பட்டயப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

இதேபோல, நிகழாண்டிலும் ஏறத்தாழ 64 சத இடங்களுக்குத்தான் மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் ஏறத்தாழ 50 சத இடங்கள் மட்டுமே நிரம்பின.

அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் உள்ள 19,368 இடங்களில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 70 இடங்களும், அரசு உதவி பெறும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் 602 இடங்களும், சுய நிதி ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் 9,762 இடங்களும் காலியாக உள்ளன.

கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவிகள் பெரும்பாலும் அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களுக்கும்தான் முன்னுரிமை அளித்தனர். கட்டணம் குறைவு, தரமான ஆசிரியர்கள் போன்றவையே இதற்குக் காரணம்.

ஆனால், கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்பட்ட நிறுவனங்களில் சேர வாய்ப்பு கிடைக்காததால் பெரும்பாலான மாணவிகள் சேர்க்கை ஆணை பெறுவதைத் தவிர்த்துவிட்டனர். இதுவே, காலியிடங்கள் ஏற்பட்டதற்கு காரணம் என ஆசிரியர் கல்வி ஆய்வு மற்றும் பயிற்சி இயக்கக வட்டாரங்கள்

தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.