தஞ்சாவூர், ஜூலை 23: ஒரத்தநாடு பணிமனையை சீரமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தஞ்சையில் அண்மையில் நடைபெற்ற இச் சங்கத்தின் 30-வது ஆண்டு பேரவைக் கூட்டத்துக்கு தலைவர் வி. சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் ஜெ. லட்சுமணன், துணைப் பொதுச் செயலர் என். மணி, ஏஐடியுசி மாவட்டச் செயலர் சி. சந்திரகுமார், நகரச் செயலர் வே. சேவையா, வங்கி ஊழியர் சங்க நிர்வாகி கே. அன்பழகன் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தஞ்சையில் 2 கிளைகளாக இயங்கி வந்த போக்குவரத்துக் கழக பணிமனைகளை சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஒரே கிளையாக மாற்றியதால், பணி சுமை அதிகரிப்பு, உதிரி பாகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, முன்பிருந்தது போலவே பணிமனையை தனித் தனி கிளைகளாகப் பிரிக்க வேண்டும்.
விபத்து இழப்பீட்டுத் தொகைக்காக அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்யும் நடவடிக்கைகள் அதிகமாகி வருவதால், அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரத்தநாட்டில் கடந்த ஆட்சியின் போது தேர்தலை கருத்தில் கொண்டு அவசர அவசரமாகத் தொடங்கப்பட்ட பணிமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை, இதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக வி. சுப்பிரமணியம், பொதுச் செயலராக டி. மதிவாணன், பொருளராக கே. சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.