புதுக்கோட்டை, ஜூலை 23: அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ஓய்வூதிய அடையாள அட்டையை கருவூல அலுவலர் வழங்க வேண்டுமென தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற நான்காவது மாவட்ட மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஓய்வூதித்தை ரூ. 3500 ஆக உயர்த்த வேண்டும், 15.9.2008 க்கு முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு பலன்களை வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதுகை டவுன்ஹாலில் நடைபெற்ற மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் பி. ஆழ்வாரப்பன் தலைமை வகித்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலர் சி. ராமமூர்த்தியும், வரவு செலவு அறிக்கையை பொருளர் பி. மீனாட்சிசுந்தரமும் வாசித்தனர்.
மாவட்ட அரசு ஊழியர் சங்கத் தலைவர் கே. ஜெயபாலன், செயலர் கி. நாகராஜன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
மாவட்டத் துணைத் தலைவர்கள் ஜெ. நூர்முகமது, பா. சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலர்கள் எம். முத்தையா, ஆர். கோபாலன், சோ. தியாகராஜன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
மாநில பொருளர் என். ரத்தின சுப்பிரமணியன் சிறப்புரையாற்றினர். முன்னதாக, மாவட்டத் துணைத் தலைவர் ந. ரத்தினசாமி வரவேற்றார். வட்டக்கிளை டி. சிவலிங்கம் நன்றி கூறினார்.