கரூர், ஜூலை 23: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நித்யானந்தாவுக்கு எதிராக, கரூர் மாவட்ட தி.க.வினர் கரூரில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் அ. பாரதமணி தலைமை வகித்தார். இளைஞரணி மாவட்டத் தலைவர் ம. செகநாதன், செயலர் ச. குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேச்சாளர் கோவை. வீரமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்து ஊடகங்களை, சாட்சிகளை மிரட்டி வருகிறார். எனவே, ஜாமீனை ரத்து செய்து, நித்யானந்தாவை கைது செய்வதோடு, அவர் மீதான வழக்கை விரைந்து நடத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தி.க. மாவட்டத் தலைவர் மு.க. ராசசேகரன், செயலர் ம. காளிமுத்து, பொதுக் குழு உறுப்பினர்கள் பழ. ராமசாமி, சே. அன்பு, மாவட்ட நிர்வாகிகள் நா. சதாசிவம், வே. ராஜு, தே. அலெக்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.