கரூர், ஜூலை 23: கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வெ. ஷோபனா சிறப்பு பார்வையாளராகப் பங்கேற்று கூட்டத்தை ஆய்வு செய்தார்.
கரூர் மாவட்டத்திலுள்ள 158 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை சிறப்பு கிராமசபைக் கூட்டங்களை நடத்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள், பின்தங்கிய பகுதிக்கான மானியத் திட்டம், முழு சுகாதாரத் திட்டம், 2011 ஜனவரி முதல் ஜூன் முடிய ஊராட்சியின் பொது நிதி செலவினம் தொடர்பான பொருள்களை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென ஆட்சியர் தெரிவித்திருந்தார். இதன்படி மாவட்டத்திலுள்ள 158 ஊராட்சிகளிலும் சனிக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
மண்மங்கலம் கிராமத்தில் ஊராட்சித் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தை ஆட்சியர் ஷோபனா பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பேசியது:
கிராம வளர்ச்சியை சிறப்பாக மேற்கொள்வதற்காக சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் கிராம மக்கள் அனைவரும் பங்கேற்று வளர்ச்சிக்குத் தேவையான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். தற்பொழுது ஒவ்வொரு ஊராட்சியிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யப்பட வேண்டிய பணிகளை பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும். அதே போல, இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு செலவிடப்பட்ட செலவினங்களை ஆய்வு செய்ய வேண்டும். முழு சுகாதாரத் திட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்டிக்கொண்டு சுகாதார வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ். கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.