திருச்சி, ஜூலை 23: கிராமசபைக் கூட்டங்கள் மக்களாட்சியை உறுதிப்படுத்துகின்றன என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், புங்கனூர் ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
"மக்களாட்சி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுகிறது. சாலை வசதி, சமுதாயக் கூடம் கட்டுதல் போன்றவற்றை மக்களே முடிவு செய்ய முடியும்.
கீழ்மட்ட அளவில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அரசு அளித்துள்ளது. கிராமசபைக் கூட்டங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தரும்.
தமிழக அரசு ஊராட்சித் தலைவர்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளது. ஊராட்சிப் பகுதிகளுக்குத் தேவையான சாலை, நீர் ஆதாரத்தை பெருக்க குளம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முன்னுரிமை கொடுத்து தேர்ந்தெடுத்து செய்ய வேண்டும்.
100 நாள் வேலை உறுதித் திட்ட ஊதியம் வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது. இதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கிகளுடன் பேசி, தாமதம் இல்லாமல் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
புங்கனூர் கிராமத்தை தனி வருவாய் கிராமமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது' என்றார் ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன். கூட்டத்துக்கு புங்கனூர் ஊராட்சித் தலைவர் பாக்யராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் எம். சந்தோஷ்குமார், உதவி திட்ட அலுவலர் மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆர். பாலசுப்பிரமணியம், பி. அல்போன்ஸ் மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.