மயிலாடுதுறை, ஜூலை 23: மயிலாடுதுறையை அடுத்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியை தாக்கி, நகைகள், ரொக்கத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
குத்தாலம் வட்டம், பெரம்பூர் காவல் சரகம், சுந்தரப்பன் சாவடியைச் சேர்ந்தவர் மனோகரன் (55). இவரது மனைவி விஜயலட்சுமி (45). வழக்கம்போல் வெள்ளிக்கிழமை இரவு வீட்டினுள் அவர்கள் இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, கதவை தட்டும் சப்தம் கேட்டு மனோகரன் வீட்டின் கதவை திறந்தாராம்.
அப்போது, முகமூடி அணிந்த நபர்கள், மனோகரனை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டினராம். சப்தம் கேட்டு எழுந்துவந்த ஜெயலட்சுமியை சிலர் பிடித்து கொண்டனராம்.
பின்னர் மனோகரன் அணிந்திருந்த தங்க சங்கிலி, விஜயலட்சுமி அணிந்திருந்த நகைகள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரொக்கம் ஆகியவற்றை எடுத்து கொண்டு அவர்கள் தப்பிவிட்டனராம். முகமூடி நபர்கள் தாக்கியதில் காயமடைந்த மனோகரன், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மயிலாடுதுறை போலீஸôர் விசாரிக்கின்றனர்.