அரியலூர், ஜூலை 23: அரியலூர் மாவட்டம், தேளூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் குறித்து தங்களுக்கு முறையான தகவல் தெரிவிக்காததைக் கண்டிப்பதாகக் கூறி, கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சனிக்கிழமை காலை தேளூர் ஊராட்சி அலுவலகம் அருகில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊராட்சி அலுவலகம் முன் கூடி, கிராமசபைக் கூட்டம் குறித்து தங்களுக்கு எந்தவித தகவலையும் ஊராட்சித் தலைவர் தெரிவிக்கவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கூறியது:
தேளூர் ஊராட்சியில் தேளூர், குடிசல், வி.கைகாட்டி, மண்ணுழி ஆகிய கிராமங்கள் உள்ளன. ஆனால், எந்தப் பகுதி மக்களுக்கும் கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கவில்லை.
மேலும், ஊராட்சித் தலைவர் ஆர். ராமராஜ் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ள நிலையில், அவர் தலைமையில் கூட்டம் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்றனர் அவர்கள். இந்த நிலையில், கூட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த ஒன்றிய மேற்பார்வையாளர், மறு தேதியில் கூட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.