மணப்பாறை, ஜூலை 23: திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நிலப் பிரச்னை தொடர்பாக, பெண் உள்பட 6 பேரை தாக்கியதாக திமுக பிரமுகரின் மனைவி சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மணப்பாறை அருகேயுள்ள வையம்பட்டியைச் சேர்ந்தவர் அமீர் பாஷா (70). திமுக நகரச் செயலர். வையம்பட்டி அருகே தேக்கமலை கோவில்பட்டியில் இவருக்குச் சொந்தமான 8.4 ஏக்கர் நிலத்தை 1988 ஆம் ஆண்டில் கிரயப் பத்திரம் போட்டு விற்றாராம்.
அதன் பின்னர், மற்றொருவருக்கு கை மாறியதாகக் கூறப்படும் அந்த நிலத்தை 2008 ஆம் ஆண்டில் மணப்பாறை ஏட்டு தெருவைச் சேர்ந்த ஜமால் முகமதுவின் மனைவி பரகத்நிஷா வாங்கினாராம்.
இதனிடையே, அந்த நிலம் தனக்குத்தான் சொந்தம் என மதுரை உயர் நீதிமன்றத்தில் அமீர்பாஷா வழக்குத் தொடர்ந்தாராம்.
இந்நிலையில், 2010 ஆம் ஆண்டில் அந்த நிலத்தை அமீர்பாஷா ஆக்கிரமித்துக் கொண்டாராம். அப்போது, அது பற்றி பரகத்நிஷா போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பரகத்நிஷா அண்மையில் காவல் கண்காணிப்பாளர் ஆர். லலிதா லட்சுமியிடம் புகார் கொடுத்தார். இதுகுறித்து கண்காணிப்பாளர் பிறப்பித்த உத்தரவின் பேரில் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் தொல்காப்பியன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே, சம்பந்தப்பட்ட நிலத்தில் ஜூலை 21-ம் தேதி சிலர் மரங்களை வெட்டுவதாகக் கிடைத்த தகவலின் பேரில் பரகத்நிஷா மற்றும் அவரது குடும்பத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
அங்கு பரகத்நிஷா உள்பட 6 பேரை அமீர் பாஷா தரப்பினர் கட்டையால் தாக்கி நிலத்துக்குள் வர விடாமல் தடுத்தனராம்.
இதுகுறித்து பரகத்நிஷா வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் அதிவீரராமபாண்டியன் வழக்குப் பதிந்து அமீர்பாஷாவின் மனைவி மெஹருன்னிஷாவை சனிக்கிழமை கைது செய்தார். மேலும், 9 பேரை போலீஸôர் தேடி வருகின்றனர்.