திருச்சி, ஜூலை 23: புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு, உரிய விசாரணை செய்து குடும்ப அட்டைகளை விரைந்து வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் கா. பாலச்சந்திரன்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கோவை ஆகிய 7 மாவட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
"மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை 8000 லிட்டர் குறைத்துள்ளது. இதனால், 2 எரிவாயு உருளை, ஒரு எரிவாயு உருளை உள்ள குடும்ப அட்டைகள் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் மண்ணெண்ணெய் குறைத்து வழங்குவதன் மூலமும், போலி குடும்ப அட்டைகளை கண்டறிந்து, அதை நீக்குவதன் மூலமும் மண்ணெண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் தொகை பதிவேடு தயார் செய்யும் திட்டத்தின் கீழ் திரட்டப்படும் விவரங்களைக் கொண்டு போலி குடும்ப அட்டைகளை நீக்கலாம்.
இந்தத் திட்டத்தின்படி, குடும்ப நபர்களின் புகைப்படம், கை ரேகை, விழித்திரை பதிவுகள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. முதல் கட்டமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பதிவேடு தயாரிக்கும் பயணி தற்போது, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், கடலூர் மாவட்டம், சிதம்பரம், பண்ருட்டி, சீர்காழி ஆகிய 7 வட்டங்களில் நடைபெற்று வருகிறது.
தேசிய அடையாள அட்டை மூலம் போலி குடும்ப அட்டைகளை அகற்ற முடியும். புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பம் செய்தவர்களுக்கு உடனடியாக விசாரணை செய்து காலதாமதம் செய்யாமல் குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும்' என்றார் பாலச்சந்திரன்.
ஆய்வுக் கூட்டத்துக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கா. பேச்சியம்மாள், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் இரா. ஜயம்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் அவர், கம்பரசம்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் திடீர் ஆய்வு செய்தார்.
திருச்செந்துறை கிராமத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு விவரங்கள் சேகரிப்பு முகாமில், குடும்ப நபர்களின் புகைப்படம், கை ரேகை, விழித்திரை ஆகியவை முறையாகப் பதிவு செய்யும் பணிகளையும் ஆய்வு செய்தார்
பாலச்சந்திரன்.