அரியலூர்,ஜூலை 30: திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க. ஸ்டாலின் கைதைக் கண்டித்து, அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 248 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க சனிக்கிழமை தஞ்சையிலிருந்து கார் மூலம் திருவாரூர் நோக்கிச் சென்ற போது, திருத்துறைப்பூண்டி அருகே அவரது காரை வழிமறித்த போலீஸôர், அவருடன் வந்த திமுக மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணனைக் கைது செய்வதாகக் கூறினர்.
இதையடுத்து, திமுகவினருக்கும், போலீஸôருக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோரை போலீஸôர் கைது செய்தனர்.
இதுகுறித்த தகவலறிந்த அரியலூர் மாவட்ட திமுக செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.எஸ். சிவசங்கரன் தலைமையில் திமுகவினர் அரியலூர் தேரடிப் பகுதியில் குவிந்தனர்.
மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் தெய்வ. இளையராஜன், அரியலூர் ஒன்றியச் செயலர் ஜோதிவேல், நகரச் செயலர் முருகேசன், தலைமைக் கழகப் பேச்சாளர் பெருநற்கிள்ளி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அறிவழகன், நகராட்சித் தலைவி விஜயலட்சுமி செல்வராஜன் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் தேரடி, மார்க்கெட் தெரு வழியாக பேருந்து நிலையம் வரை ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸôர் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இதுபோல, ஜயங்கொண்டம் நான்கு சாலை சந்திப்பில் ஒன்றிய திமுக செயலர் தனசேகர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலும், தா.பழூரில் ஒன்றியச் செயலர் க.சொ.க. கண்ணன் தலைமையிலும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆண்டிமடம் கடைவீதியில் மாவட்டப் பிரதிநிதி ஜோதிவேல் தலைமையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபோல, செந்துறையில் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
மீன்சுருட்டியில் பொய்யாமொழியில் தலைமையிலும், உடையார்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் தலைமையிலும், விக்கிரமங்கலத்தில் ஒன்றிய அவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையிலும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
திருமானூர் பேருந்து நிலையம் அருகே மாவட்டத் துணைச் செயலர் தனபால் தலைமையிலும், எம்.ஜி.ஆர். சிலை அருகே மாவட்டப் பிரதிநிதி துரை.தியாகராஜன் தலைமையிலும், ஒன்றியக் குழு அலுவலக வாயிலில் ஒன்றியச் செயலர் இரா. கென்னடி தலைமையிலும், ஒன்றியக் குழு அருகில் மாவட்டப் பிரதிநிதி மாணிக்கம் தலைமையிலும், கீழப்பழூரில் முன்னாள் மாவட்டப் பிரிதிநிதி மணிவேல் தலைமையிலும் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட திமுகவினர் 248 பேர் அந்தந்த பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு, பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.