தஞ்சாவூர், ஜூலை 30: விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை சார்பில் ஆராய்ச்சியில் ஈடுபடும் 1,500 விஞ்ஞானிகளுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைச் செயலர் டி. ராமசாமி.
வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வளரும் பசுமைத் தொழில்நுட்பப் பன்னாட்டு மாநாட்டு நிறைவு விழாவில் மேலும் அவர் பேசியது:
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை 1,500 விஞ்ஞானிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் ஆராய்ச்சி செய்வற்காக தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5 வயது சிறுவனும் ஒருவர். ஆராய்ச்சிக்கு வயது வரம்பு ஏதுமில்லை. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு இதுபோன்ற வசதிகளை செய்து கொடுப்பது பாராட்டுக்குரியது என்றார் ராமசாமி.
விழாவில் பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி:
பல்கலைக்கழகம் தொடங்கி 4 ஆண்டுகளுக்குள் பசுமைத் தொழில்நுட்பப் பன்னாட்டு மாநாடு இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியையும், மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவார்ந்த சிந்தனை வெளிப்பாடாக இம்மாநாடு அமைந்துள்ளது.
இதுபோன்ற மாநாடுகளுக்கு மேல்நாட்டு அறிஞர்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை தரவேண்டும். பல்கலைக்கழக வளர்ச்சி என்பது தனிப்பட்ட யாருடையதும் அல்ல. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செய்த முயற்சியின் வெளிப்பாடாகும் என்றார் வீரமணி.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழக துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் முன்னாள் தலைவர் ஆர். நடராஜன், அமெரிக்கா டெக்சாஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் இலக்குவன், திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கல்விக்கழக இயக்குநர் எஸ். சுந்தராஜன், அமெரிக்கா ஐய்வா பல்கலைக்கழக பேராசிரியர் எரிகாப்மேன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பல்வேறுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழகப் பதிவாளர் மு. அய்யாவு வரவேற்றார். ஆராய்ச்சிப்புல முதன்மையர் டி. குமார் நன்றி கூறினார்.