நீடாமங்கலம், ஜூலை 30: திருவாரூர் மாவட்டம், பூவனூர் ஸ்ரீ சதுரங்கவல்லப நாதசுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக் கோயிலில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி, இங்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் இப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஸ்ரீ கற்பகவல்லி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி சமேத ஸ்ரீ சதுரங்கவல்லப நாதர், ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ஸ்ரீ சந்தான ராமர் கோயில்: நீடாமங்கலம் ஸ்ரீ சந்தான ராமசுவாமி கோயிலிலும் ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ சந்தான ராமசுவாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, சீதாபிராட்டியாருடன் ஸ்ரீ சந்தான ராமர் உஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.