காரைக்கால், ஜூலை 30: திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு 108 லிட்டர் நல்லெண்ணையில் சிறப்பு அபிஷேகம் செய்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் கே.எச். முனியப்பா வழிபட்டார்.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சனீஸ்வர பகவானை மத்திய ரயில்வேத் துறை இணை அமைச்சர் கே.எச். முனியப்பா சனிக்கிழமை தரிசனம் செய்தார்.
கோயிலுக்கு வந்த அமைச்சரை, கோயில் நிர்வாக அலுவலர் எஸ்.கே. பன்னீர்செல்வம் வரவேற்றார்.
மூலவரான ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், அருள்மிகு பிரணாம்பிகை அம்மன் சன்னிதிகளில் தரிசனம் செய்த அமைச்சர், பின்னர் ஸ்ரீ சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார். முன்னதாக ஏற்பாடு செய்திருந்தபடி, 108 லிட்டர் நல்லெண்ணையில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர், பரிட்டம் கட்டி அமைச்சருக்கு சிவாச்சாரியர்கள் மரியாதை செய்தனர்.