புதுக்கோட்டை, ஜூலை 30: புதுக்கோட்டை நகரின் முக்கிய பொழுதுபோக்குத் தலமாகத் திகழ்ந்து வரும் புதுக்குளம், அதிலுள்ள படகுத்துறை, நான்கு கரைகள் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை மாவட்ட ஆட்சியர் ப. மகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியிலுள்ள புதுக்குளம், படகுத்துறை மற்றும் பழுதடைந்துள்ள சாலைகளை தாற்காலிகமாகச் சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வுக்குப் பிறகு ஆட்சியர் ப. மகேஸ்வரி தெரிவித்தது:
புதுக்குளத்தில் மீண்டும் படகுசவாரி, சிறுவர் பூங்கா, நிழற்குடை, பூங்காக்கள், நடைபாதை, கழிப்பறை, மின் விளக்கு, இரு சக்கர வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ. 80 லட்சத்தில் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சிக்கு உள்பட்ட சத்தியமூர்த்தி சாலை, கீழ 5-ம் வீதி, 6-ம் வீதி, மேல ராஜவீதி ஆகிய சாலைகளை மேம்படுத்த சுமார் 3 கட்டங்களாக நிதியுதவி கோரி, அரசுக்கு கருத்துரு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி கிடைக்கும் வரை மிகவும் மோசமாக பழுதடைந்துள்ள சாலைகளை தாற்காலிகமாகச் சீரமைப்பது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
ஆய்வின் போது, புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன், நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் அ. செந்தில்குமார், பொறியாளர் கே. ரங்கராஜ், தனி உதவியாளர் க. தமிழ்மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.