பெரம்பலூர், ஜூலை 30: முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க வினர் 57 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
திருவாரூர் திமுக மாவட்டச் செயலர் பூண்டி. கலைவாணனை போலீஸôர் சனிக்கிழமை கைது செய்ய முற்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினை போலீஸôர் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து, பெரம்பலூர் மாவட்ட திமுக நிர்வாகிகள், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முகாம் அலுவலகத்திலிருந்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ராஜ்குமார் தலைமையில் ஊர்வலமாகச் சென்று புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது, பாலக்கரை பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸôர் திமுகவினரை தடுத்தி நிறுத்தி வேனில் ஏறுமாறு கூறினர்.
இதற்கு திமுகவினர் மறுத்ததால், திமுகவினருக்கும், போலீஸôருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து, பாலக்கரை பகுதியில் திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இதில் பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் கி. கனகராஜ், ஏ. அப்துல்பாரூக், என். ஜெயக்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜகதீஸ்வரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செல்வக்குமார், வேப்பந்தட்டை ஒன்றியச் செயலர் எஸ். தங்கராசு உள்பட 27 பேரை, காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார், ஆய்வாளர் தே.சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீஸôர் கைது செய்தனர்.
இதேபோல, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பில் பெரம்பலூர் மாவட்ட திமுக செயலர் பா. துரைசாமி தலைமையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நகர்மன்றத் துணைத் தலைவர் கி. முகுந்தன், தலைமைக்கழகப் பேச்சாளர் விஜயரத்தினம் உள்பட 9 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
மேலும், குன்னம் பேருந்து நிறுத்தம் அருகில் வேப்பூர் ஒன்றியச் செயலர் சி. ராஜேந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 21 திமுக நிர்வாகிகளை குன்னம் போலீஸôர் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 57 திமுகவினரை மாவட்ட ஆயுதப் படை வளாகத்துக்கு போலீஸôர் அழைத்துச் சென்றனர்.