பெரம்பலூர், ஜூலை 30: பெரம்பலூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அண்மையில் பரிசு வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில், ஸ்கூப்ஸ்டெர்ஸ் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் அன்மையில் நடைபெற்றன.
போட்டிகளுக்கு ஸ்கூப்ஸ்டெர்ஸ் சங்கத் தலைவர் கே. செந்தில் தலைமை வகித்தார். செயலர் பிரபாகரன், பொருளாளர் வி. கிறிஸ்டிஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இரு நாள்கள் நடைபெற்ற போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 கூடைப்பந்து அணி வீரர்கள் பங்கேற்றனர். இதில் மோனிக்ஸ் கூடைப்பந்து அணியினர் முதலிடமும், ஸ்கூப்ஸ்டெர்ஸ் அணியினர் இரண்டாம் இடமும், குன்னம் கூடைப்பந்து அணியினர் மூன்றாம் இடமும் பெற்றனர்.
போட்டியில் வெற்றிவர்களுக்கு பெரம்பலூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா. தமிழ்செல்வன், அதிமுக நகரச் செயலர் ஆர்.டி. ராமசந்திரன், அதிமுக மாவட்டப் பிரதிநிதி எம். ஆனந்தராஜ் ஆகியோர் ரொக்கப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
நிகழ்ச்சியில் அதிமுக நகர அவைத் தலைவர் சி. ரமேஷ், ரியல் எஸ்டேட் உரிமையாளர் ஜி. சீனிவாசன், ஸ்கூப்ஸ்டெர்ஸ் சங்க உறுப்பினர்கள் சுதன், நிர்மல், கைப்பந்துப் பயிற்சியாளர் சிவரஞ்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.