மணமேல்குடி, ஜூலை 30: மணமேல்குடி அருகேயுள்ள மீமிசலில் மீனவர்களுக்கு டீசல் என்ஜின் பழுது பார்க்கும் பயிற்சி அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றது.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அன்னவாசல் கிராம வள மையம் சார்பில் நடைபெற்ற பயிற்சிக்கு தேசிய இணையக் கழகப் பிரதிநிதி எம். ஆறுமுகம் தலைமை வகித்தார்.
ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர். ராஜ்குமார் நிறுவன செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
கிரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் சேவை பிரிவு உதவி மேலாளர் ஆர். கணேசன், நிர்வாக இயக்குநர் ஆர். கல்யாணசுந்தரம், தொழில்நுட்ப வல்லுநர் ஆர். சோமசுந்தரம் ஆகியோர் டீசல் என்ஜின் குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளித்து, மீனவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
மீன்வளத் துறை ஓவர்சியர் ஆர்.கே. சுந்தராசு, மீன்வளத் துறை திட்டங்கள் குறித்துப் பேசினார்.
முன்னதாக ஆராய்ச்சி நிறுவன இணைத் திட்ட அலுவலர் எஸ். குருமூர்த்தி வரவேற்றார். நிறைவில் எஸ். முருகேசன் நன்றி கூறினார்.