திருச்சி, ஜூலை 30: திருச்சி மாவட்டத்தில் 21.2 ஹெக்டேரில் கம்பு விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன என வேளாண் துறை இணை இயக்குநர் ஜே. சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
"ஊட்டச்சத்து பாதுகாப்பை ஏற்படுத்துவதற்காகத் தீவிர சிறுதானிய உற்பத்தி திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியபுரம், மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி ஆகிய வட்டாரங்களில் 21.2 ஹெக்டேர் பரப்பளவில் கம்பு விதைப் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பண்ணைகளிலிருந்து 17.2 மெட்ரிக் டன்கள் விதைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த விதைகளுக்குத் தீவிர சிறுதானிய உற்பத்தி திட்டத்தின் மூலம் கிலோவுக்கு ரூ. 10 மானியமாக வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் விதைகள் விவசாயிகளுக்கு கம்பு பயிர் சாகுபடி செய்ய விதை கிராமத் திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் விநியோகம் செய்யப்படவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஐ.சி.எம்.வி. 221 ரக கம்பு விதைப் பண்ணையாகப் பயிரிடப்பட்டுள்ளது. இவற்றிலிருந்து சான்று பெற்ற விதைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளது.
கம்பு தானியத்தில் புரதச்சத்து 10.6 சதம், மாவுச்சத்து 71.6 சதம், நார்சத்து 1.3 சதம், கொழுப்புசத்து 5.1 சதம், தயமின் 0.0003 சதம், நியாசின் 0.0032 சதம், மாங்கனீஸ் ஒரு சதம், துத்தநாகம் 0.002 சதம் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கம்பு போன்ற சிறுதானிய பயிர்கள் உடல் நலத்துக்குச் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.
கம்பில் இருந்து கூழ், களி, ரொட்டி, முறுக்கு, தோசை போன்ற தின்பண்டங்கள் தயாரிக்கலாம்' என்றார் சேகர்.