Enable Javscript for better performance
மாற்றத்தை எதிர் நோக்கும் தஞ்சை, குடந்தை...- Dinamani

சுடச்சுட

  

  மாற்றத்தை எதிர் நோக்கும் தஞ்சை, குடந்தை...

  By நமது நிருபர்  |   Published on : 20th September 2012 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர், மார்ச் 13:       கடந்த தேர்தலில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டிருந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவோணம், வலங்கைமான் (தனி) தொகுதிகள் கலைக்கப்பட்டு, தற்போது 8 தொகுதிகள் உள்ளன. இவற்றில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு திமுக - காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

  தஞ்சாவூர்:   திமுகவில் பலரும் இத் தொகுதியைக் கேட்டு விருப்பம் தெரிவித்திருந்தாலும், தற்போதைய எம்எல்ஏ சி.நா.மீ. உபயதுல்லா, இளைஞரணி மாவட்டச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் எம்எல்ஏ நடராஜனின் மகன் மணிமாறன் ஆகியோருக்கும் இடையேதான் இந்த முறையும் போட்டி. மாற்றம் வேண்டும் என்ற பொதுவான கருத்தை திமுக தலைமை ஏற்றால், மு.க. ஸ்டாலினின் தீவிர ஆதரவாளரான நீலமேகத்துக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

  ஒரத்தநாடு:  இங்கு கலைக்கப்பட்ட திருவோணம் தொகுதி எம்எல்ஏ கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏ ராஜமாணிக்கம், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செல்வி சிவஞானம், எல்.ஜி. அண்ணா, ஒன்றியக் குழுத் தலைவர் மு. காந்தி, ஒன்றியச் செயலர் தியாக. இளங்கோ, கட்சியிலிருந்து ஓரம் கட்டப்பட்டிருந்த திருவோணம் முன்னாள் எம்எல்ஏ எம். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். வெற்றி வாய்ப்பை திருவோணம் தொகுதியில் இருந்த 19 ஊராட்சிகளே முடிவு செய்யும் என்பதால், அப் பகுதியைச் சேர்ந்த மகேஷ் கிருஷ்ணசாமிக்கு சீட் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

      மதிமுகவை உடைத்து எல். கணேசன் திமுகவில் இணைந்த போது அவருக்கு அளித்த வாக்குறுதிப்படி அவரது மகன் எல்.ஜி. அண்ணாவுக்கு அத் தொகுதி அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

   பட்டுக்கோட்டை:    முன்னாள் திமுக எம்எல்ஏக்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், க. அண்ணாதுரை, நகரச் செயலர் சீனி. அண்ணாதுரை, மதுக்கூர் ஒன்றியச் செயலர் சி. கோவிந்தராஜ் உள்ளிட்ட பலரும் விருப்ப மனு அளித்திருந்தாலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் அதற்கே ஒதுக்கப்படும் என்ற ஒப்பந்தப்படி இத் தொகுதியை காங்கிரஸ் தக்கவைத்துக் கொள்ளும். அப்படி நடந்தால், ஜி.கே. வாசனின் தீவிர விசுவாசியான தற்போதைய எம்எல்ஏ என்.ஆர். ரங்கராஜன் வேட்பாளராக இருப்பார்.

    பேராவூரணி:   ஒப்பந்தப்படி காங்கிரஸ் கட்சிக்கு இத் தொகுதி ஒதுக்கப்பட வேண்டும். என்றாலும், இத் தொகுதியை விட்டுக்கொடுத்துவிடலாம் என்ற முடிவில் காங்கிரஸ் இருப்பதாகத் தெரிகிறது. இங்கு 2 முறை எம்எல்ஏவாக இருந்த எஸ்.வி. திருஞானசம்பந்தம், கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீரகபிலனிடம் தோற்றார்.   

   கடந்தத் தேர்தலில் தனித்து நின்ற தேமுதிக இத் தொகுதியில் 19,627 வாக்குகள் பெற்றது. சில காரணங்களால் காங்கிரஸ் இத் தொகுதியை விட்டுக்கொடுத்தால், திமுக தரப்பில் பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார், மு.கி. முத்துமாணிக்கம், சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவர் இரா. ராஜரத்தினம் இவர்களில் ஒருவருக்கு கிடைக்கலாம்.

    திருவையாறு:   தற்போதைய எம்எல்ஏ துரை. சந்திரசேகரன், பூதலூர் ஒன்றியச் செயலர் கல்லணை செல்லக்கண்ணு, முன்னாள் செயலர் பூண்டி வெங்கடேசன் ஆகியோர் போட்டியில் முன்னணியில் உள்ளனர். தொகுதி சீரமைப்புக்கு பின்னர் இத் தொகுதி தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கருதுவதால் காங்கிரஸ் இதனைக் கேட்பதாகக் கூறப்படுகிறது. அப்படி காங்கிரஸ் கேட்டுப் பெற்றால், எஸ்.பி. அந்தோனிசாமி, ஜி.கே. சுரேஷ் மூப்பனார், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், பேச்சாளர் வயலூர் ராமநாதன் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம்.

   பாபநாசம்:   கடந்த முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டு தோற்ற தொகுதி இது. கலைக்கப்பட்ட வலங்கைமான் தொகுதியின் பெரும் பகுதி இதனுடன் இணைக்கப்பட்டதால், ஜாதி வாக்கு அடிப்படையில் தனக்கு சாதகமில்லாத தொகுதியாக இதைக் காங்கிரஸ் கருதுகிறது. இதற்குப் பதிலாக கும்பகோணத்தை குறிவைத்துள்ளது.

     காங்கிரஸ் இத் தொகுதியை கைவிட்டால் திமுக தரப்பில் வழக்குரைஞர் துளசியய்யா, ஒன்றியச் செயலர் தாமரைச்செல்வன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் அய்யாராசு, பம்பப்படையூர் எஸ். கல்யாணசுந்தரம் ஆகியோரில் ஒருவருக்கு ஒதுக்கப்படலாம். கல்யாணசுந்தரம் தொடர்ந்து இரண்டு முறை இங்கு போட்டியிட்டு தோற்றதால், வேறு ஆள் இல்லை என்றால் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    திருவிடைமருதூர் (தனி):   தொகுதி சீரமைப்பில் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளதால், இங்கு ஏற்கெனவே போட்டியிட்ட திமுகவினர் கும்பகோணத்தை குறிவைத்து களம் புகுந்துள்ளனர். தனித் தொகுதி என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இது ஒதுக்கப்படலாம்.

  கும்பகோணம்:   தஞ்சை மாவட்டத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ள தொகுதி இது. முன்னாள் அமைச்சர் கோ.சி. மணி, அவரது மகன் கோ.சி. இளங்கோவன், ஒன்றியச் செயலர் சாக்கோட்டை க. அன்பழகன், நகர்மன்றத் தலைவர் சு.ப. தமிழழகன், திருவிடைமருதூர் முன்னாள் எம்எல்ஏ செ. ராமலிங்கம் ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

  உடல் நலனைக் கருத்தில் கொண்டு தனக்கு இடம் இல்லை என்றால், தனது மகனுக்கு இத் தொகுதியைக் கேட்டுப் பெற்றுவிடுவது என்பதில் கோ.சி. மணி மிகத் தீவிரமாக உள்ளார்.

    மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் தனது மைத்துனர் சுரேஷ் மூப்பனாருக்காக இத் தொகுதியைக் கேட்டு, திமுக தலைமையிடம் தனிப்பட்ட முறையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி வருவதாகத் தெரிகிறது. கோ.சி. மணி இல்லாத இடத்தில் திமுகவில் வேறு ஒருவர் போட்டியிடுவதால் ஏற்படும் தர்ம சங்கடத்தைத் தவிர்க்க, கும்பகோணம் தொகுதியை காங்கிரஸýக்கு விட்டுக்கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  ஒருவர் பெயரில் 200 விருப்ப மனு

  தி

  விடைமருதூர், கும்பகோணம் தவிர்த்து, மற்ற

  6 தொகுதிகளிலும் சேர்த்து மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்தின் தம்பி எஸ்.எஸ். ராஜ்குமார் பெயரில் அவரது ஆதரவாளர்கள் சுமார் 200 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது.

  ஆனால், ராஜ்குமார் தன் பெயரில் விருப்ப மனு எதுவும் அளிக்கவில்லை. அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நேர்காணலுக்கும் அவர் செல்லவில்லை.

  தலைமை தன்னை அழைத்து வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கையில் அவர் காத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

  நாகையைக் கைவிட மார்க்சிஸ்ட் முடிவு?

  நமது நிருபர்

  நாகப்பட்டினம், மார்ச் 13:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று நாகப்பட்டினம். 1957-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தல்களில் 6 முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

     1967-ல் கே.ஆர். ஞானசம்பந்தன், 1977, 1980-ம் ஆண்டுகளில் ஆர். உமாநாத், 1984, 1989-ம் ஆண்டுகளில் கோ. வீரய்யன், 2006-ம் ஆண்டில் வி. மாரிமுத்து ஆகியோர் இந்தத் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

      2006-ம் ஆண்டில் திமுக கூட்டணியில், மார்க்சிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட வி. மாரிமுத்து 57,315 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட 2,344 வாக்குகள் அதிகம் பெற்றார். தனித்துப் போட்டியிட்ட தேமுதிக 9,949 வாக்குகளைப் பெற்றது.

      நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் நாகை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைப் பெற திமுகவினரும், இத் தொகுதியைத் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

     அதிமுக அணியில், நாகை தொகுதியை (மார்க்சிஸ்ட் முடிவையொட்டி) அதிமுகவே தன் வசம் வைத்துக் கொள்ளும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தொகுதியைத் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் வலியுறுத்தப்படுவதாகத் தெரிகிறது.

     திமுக, அதிமுக ஆகிய 2 கூட்டணியிலும் பல கட்சிகள் நாகை சட்டப்பேரவைத் தொகுதியை விரும்பிக் கோரும் நிலையில், இந்தத் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைவிட முடிவெடுத்துள்ளது.

     நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் (தனி), பூம்புகார் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கோரியுள்ளதாகவும், கீழ்வேளூர் தொகுதியைப் பெறுவதில் மார்க்சிஸ்ட் முழுக் கவனம் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.

     தொகுதிகள் மறுசீரமைப்பு காரணமாக புதிதாக உருவாகியுள்ள கீழ்வேளூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பெரும் பலம் இருப்பதாக அக் கட்சியினர் கருதுவதே நாகை சட்டப்பேரவைத் தொகுதியைக் கைவிடும் முடிவுக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த கீழ்வேளூர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உண்டு. ஆழியூர், தேவூர், சாட்டியக்குடி, வெண்மணி உள்ளிட்ட கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவில் மார்க்சிஸ்ட் ஆதரவு குடும்பங்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவுக்கு மார்க்சிஸ்ட் வந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

      தற்போது திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு நாகை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓரிரு நாள்களாக நாகை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.    மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மார்க்சிய தத்துவப்படி, வரும் நாள்களில் எந்த மாற்றமும் நிகழலாம், கூட்டணி அமைவதைப் பொருத்து.      

  திருநாவுக்கரசருக்கு கிடைக்குமா அறந்தாங்கி?

  நமது நிருபர்

  புதுக்கோட்டை, மார்ச் 13: புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கிய சட்டப்பேரவைத் தொகுதியாகவும், தமிழகம் முழுவதும் முடிவு எதிர்பார்க்கக்கூடிய தொகுதியாகவும் கடந்த 35 ஆண்டுகளாக இருந்து வருவது அறந்தாங்கி தொகுதி. காரணம், இந்தத் தொகுதியில்தான் முன்னாள் அமைச்சர் சு. திருநாவுக்கரசர் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று, சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     1977-ல் அப்போது தொகுதியில் அவ்வளவாக அறிமுகம் இல்லாத இளைஞராக முதல் முறையாக அதிமுக வேட்பாளராக சு. திருநாவுக்கரசர் போட்டியிட்டார். அப்போது, எம்.ஜி.ஆர். அறந்தாங்கியில் வாக்குச் சேகரிக்க வந்த போது, பொதுமக்களிடம் திருநாவுக்கரசரை நீங்கள் வெற்றி பெறச் செய்தால், அவருக்கு முக்கியப் பதவி அளிப்பேன் என்று கூட்டத்திலேயே கூறினார்.

     அதன்படி, வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் சட்டப்பேரவை துணைத் தலைவர்  ஆனார். பிறகு படிப்படியாக பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பணியாற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இதற்கிடையே, அதிமுகவின் மாநில இளைஞரணிச் செயலர் பதவியை வகித்து, எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.

     எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு, ஜெயலலிதா தலைமையிலான அணியில் முக்கியப் பணியாற்றி பல எதிர்ப்புகளிலிருந்து அவருக்கு பக்கபலமாக இருந்து செயலாற்றினார். இடையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட கசப்புணர்வு காரணமாக, அங்கிருந்து  பிரிந்து எம்.ஜி.ஆர். அதிமுக என்ற தனிக் கட்சி தொடங்கி ராஜீவ் காந்தி மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலைகளிலிருந்தும், 1991 பேரவைத் தேர்தலில் தனி ஆளாக அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்றார்.

     பின்னர், பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து மத்திய அமைச்சராகப் பதவி வகித்தார்.

    அறந்தாங்கி தொகுதி திமுகவின் தொகுதி என்ற போதிலும், தற்போது காங்கிரஸில் உள்ள திருநாவுக்கரசருக்கு இந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்பதில் அவரது ஆதராவாளர்கள் உறுதியாக உள்ளனர்.

     கடலோரத் தொகுதிகளே காங்கிரஸ் கட்சிக்கு வேண்டாம் என்று அந்தக் கட்சியின் தலைமை கூறிவருவதாகத் தெரிகிறது. ஆனால், அறந்தாங்கி தொகுதியில் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் ஆகிய முக்கிய மீன்பிடி நகரங்கள் உள்ளன. சமீபத்தில்தான் ஜெகதாபட்டினம் மீனவர் வீரபாண்டியன் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இருந்தபோதும், இந்தத் தொகுதியை சு. திருநாவுக்கரசருக்கு ஒதுக்கினால், அவர் நிச்சயம்  வெற்றி பெறுவார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    30 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த தேர்தலில்தான் திமுக அறந்தாங்கி தொகுதியில் வெற்றி பெற்றது. மீண்டும் இந்தத் தொகுதியை காங்கிரஸýக்கு விட்டுக்  கொடுத்தால், திருநாவுக்கரசரிடமிருந்து மீட்க முடியாது என்று திமுகவினர் கூறுகின்றனர்.

       அறந்தாங்கி தொகுதி திருநாவுக்கரசருக்கு கிடைக்காதபட்சத்தில், அவரின் சொந்த ஊருக்கு அருகே அவர் படித்த, உறவினர்கள் அதிகம் உள்ள தொகுதியும், காங்கிரஸின் தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். ராமசாமி வென்ற தொகுதியுமான திருவாடனை தொகுதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என்று காங்கிரஸôரும், திமுகவினரும் கருத்துகின்றனர்.

  வாக்காளர் அட்டை

  வழங்க வேண்டிய

  நாள்களில் பூட்டிக் கிடந்த

  வி.ஏ.ஓ அலுவலகங்கள்!

  பெரம்பலூர், மார்ச் 13: புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பெற மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பெரம்பலூரில் இரு நாள்களும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் பூட்டிக் கிடந்ததால், வாக்காளர் அடையாள அட்டை பெற முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

     பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக வாக்காளர்களாகப் பெயர் சேர்க்கப்பட்டு, இதுவரை வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மார்ச். 12, 13) நடைபெறும் சிறப்பு முகாமில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக  அலுவர்களிடம் வாக்களார் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் மா. விஜயகுமார் அண்மையில் அறிவித்திருந்தார்.

     இந்த நிலையில், புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்களர் அட்டையில் முகவரி, பெயர் மாற்றம், பிழை திருத்தம் ஆகியவை தொடர்பாக விண்ணப்பித்திருந்த பெரம்பலூர் நகரைச் சேர்ந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களுக்கு கடந்த இரு நாள்களாகச் சென்றனர்.

     ஆனால், அந்த அலுவலகங்கள் அனைத்தும் பூட்டிக் கிடந்ததால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்ததோடு, பெரும் அவதிக்குள்ளாயினர்.

     இதுகுறித்து சிலர் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று கேட்டபோது, விண்ணப்பம் பெறும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும், மூன்று நாள்களுக்குள் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும், 2010-ம் ஆண்டு வரை அடையாள அட்டை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம், உரிய விசாரணை மேற்கொண்டு, பின்னர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

     எனவே, இதுபோன்று அலைக்கழிக்காமல், சரியான தகவலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, விரைவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

  விடுத்துள்ளனர்.

  வாகனத் தணிக்கையில்

  பணத்தைப் பறிமுதல் செய்வதில் சரியான அணுகுமுறை தேவை!

  நமது நிருபர்

  கரூர், மார்ச் 13: தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்.

     தமிழகத்தில் பேரவைத் தேர்தலை சிறப்பாக நடத்தும் நோக்கில் தேர்தல் ஆணையம் பல விதிமுறைகளை வகுத்துள்ளது.

      தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படும் நோக்கில் கொண்டு வரப்படும் கறுப்புப் பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையத்தால் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

     இக் குழுவினர் ஒவ்வொரு மாவட்டத்தின் முக்கிய பகுதிகளிலும் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ரூ. 1 லட்சத்திற்கு மேல் பணம் வைத்திருப்பது தெரிந்தால் அந்தப் பணமும், வாகனமும் பறிமுதல் செய்யப்படுகிறது. கொண்டு வரப்பட்ட பணத்திற்கு உரிய கணக்கைத் தாக்கல் செய்த பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று கூறப்படுகிறது.

     இந்த நடைமுறை கரூர் போன்ற தொழில் நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை ஊதியம் வழங்கப்படுகிறது.

      தொழிலாளர்களுக்கு ஒப்பந்ததாரர்கள் அல்லது பணியில் அமர்த்தியிருப்போர் வார ஊதியம் கொடுப்பதற்காக வெளி நபர்களிடமோ, நிதி நிறுவனங்களிடமோ கடன் வாங்க வேண்டிய நிலையே பெரும்பாலும் உள்ளது.

     அவ்வாறு கடன் வாங்கிக்கொண்டு வரப்படும் பணம் இவ்வாறான வாகனத் தணிக்கையின்போது பிடிபடும்போது, அவற்றுக்குச் சரியான கணக்குகளை பணத்தை இழந்தவர்களால் கொடுக்க முடிவதில்லை.

     ஏனெனில், பணத்தைக் கடனாகக் கொடுத்த தனி நபரோ, நிதி நிறுவனங்களோ சரியான கணக்குகளைக் கையாள்வதில்லை. இதனால், இப் பணம் எங்களிடமிருந்துதான் பெறப்பட்டது என்ற உறுதிமொழியை அவர்கள் வழங்குவதில்லை.

     மேலும், பல நிதி நிறுவனங்களும், தனியார்களும் ஒரு நாளைக்கு 10 சதம் வரையில் மீட்டர் வட்டி வசூலிப்பதால், தாங்கள் பணம் வழங்கியதை ஒப்புக்கொள்ள மறுப்பதோடு, பணம் பெற்றவருக்கு மறுபடியும் பணம் வழங்குவதுமில்லை.

     குறிப்பிட்ட நேரத்தில் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாததால் அவர்களின் நிலையும் மோசமாகி விடுகிறது. இவ்வாறு சிறிய அளவிலான தொழில் நிறுவனங்களை நடத்தி வருவோர் தேர்தல் விதிமுறையால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

     கரூரில் அண்மையில் நடைபெற்ற வாகனத் தணிக்கையின்போது பெட்ரோல் கிடங்கு உரிமையாளர், டிஎன்பிஎல் ஒப்பந்ததாரர், பொறியாளர் ஆகியோரிடமிருந்து பணம் கைப்பற்றப்பட்டது.

     இவர்களில், ஒருவர் தனது பெட்ரோல் கிடங்கின் தினசரி விற்பனையை வீட்டுக்கு கொண்டு சென்று மறுநாள் வங்கியில் செலுத்துவதாகவும், மற்றவர்கள் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பதற்காக கொண்டு செல்வதாகத் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை. இது தொழிலதிபர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

     தேர்தலில் முறைகேடாகப் பணம் செலவிடப்படுவதைத் தடுக்க இதுபோன்ற கண்காணிப்புகள் அவசியம் என்றாலும், அதிலும் சில நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன.

     வாகனத் தணிக்கையில் ஈடுபடும் பறக்கும் படையில் அரசு அலுவலர்கள், காவல் துறையினர் உள்ளனர். இவர்கள் காவல் துறையிலுள்ள புலனாய்வுப் பிரிவினரிடம் அறிக்கை பெற்று அதன்படி நடவடிக்கை எடுத்தால், பெரிய அளவில் பணம் கைமாறுவது பிடிக்கப்படுவதோடு, பறக்கும் படையின் நோக்கமும் நிறைவேறும்.

     மேலும், அரசியல்வாதிகள் எவ்வாறு பணத்தைச் செலவிட வேண்டும், அதை எவ்வாறு கணக்கில் வராமல் பார்த்துக் கொள்வது என்ற தகவல்களை அரசியல்வாதிகளுக்கு அளிப்போரையும் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில் பண நடமாட்டத்தைத் தடுப்பதோடு, தேர்தலிலும் வாக்குக்கு பணம் கொடுப்பதும் குறையும்.

     மேலும், பொதுமக்களிடம் வாக்குக்கு பணம் வாங்குவது அவமானகரமான செயல் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.

  அதை விடுத்து, இதுபோன்ற வாகனத் தணிக்கை நடவடிக்கை பெரிய அளவிலான திமிங்கலங்கள் தப்பிச் செல்லவும், சிறிய மீன்கள் மாட்டிக் கொள்வதற்குமே வழிவகுக்கும்.

  தமிழகத்தில் 2.30 லட்சம்

  தேர்தல் பணியாளர்களுக்கு 4 கட்ட பயிற்சி

  சென்னை, மார்ச் 13: தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ள 2.30 லட்சம் அரசுப் பணியாளர்களுக்கு 4 கட்ட பயிற்சி முகாம்கள் நடைபெற உள்ளன.

  சென்னையில் இந்த பயிற்சி முகாம் மார்ச் 20-ம் தேதி தொடங்குகிறது.

     தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்ற அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விரைவில் வேட்பு மனு தாக்கல் தொடங்க உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் 4 கட்டமாக வழங்கப்பட உள்ளது.   இதில் தேர்தல் நடத்தும் விதிகள், விண்ணப்பங்கள், வேட்பு மனுக்களை பெற்று பராமரித்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், இணைப்பு சாதனங்களை கையாளுதல், போலீஸôருடன் இணைந்து பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைத்தல், வாக்கு எண்ணுதல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 4 கட்டமாக தலா 4 நாள்களுக்கு இந்த பயிற்சி முகாம்களை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

  சென்னையில் மார்ச் 20-ல் பயிற்சி முகாம்: சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 18 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான 3 பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்ட பயிற்சி முகாம் மார்ச் 20-ம் தேதி தொடங்குகிறது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 2-ம் தேதி பயிற்சி முகாம் தொடங்குகிறது.

  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் வாய்ப்பு:   தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக, புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விடுபட்ட வாக்காளர்களின் பெயர் சேர்க்க இன்னமும் வாய்ப்பு உள்ளது. சட்டப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்கள் முன்பு இறுதி வாக்காளர் துணை பட்டியல் வெளியிடப்படும். இதற்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.  பட்டியலில் பெயர் சேர்க்க படிவம்-6-ஐ பெற்று, தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஏற்கெனவே பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர் பெயர் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவும், பெயர் நீக்குவதற்கும் படிவம்-7-ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

    வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை திருத்துவதற்கு படிவம் 8-ல் விண்ணப்பிக்கலாம்.

  ஆய்வில் 1 லட்சம் படிவங்கள்:  புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்யக் கோரி சென்னையில் 16 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இதுவரை 1.05 லட்சம் பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

     இந்த விண்ணப்பப் படிவங்களை வீடு, வீடாக சென்று தேர்தல் பிரிவு அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.   காலிப் படிவங்களை வாக்காளர்கள் சென்னையில் உள்ள 10 மண்டல அலுவலகங்களிலும், தேர்தல் பிரிவு அலுவலகத்திலும் இலவசமாகப் பெறலாம். இதுதவிர இணையதளஙகளில் இருந்தும் பதிவிறக்கம் செய்து இந்தப் படிவங்களைப் பெறலாம். இதற்கான இணையதள முகவரி:

  ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள் ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய்,  ஜ்ஜ்ஜ்.ங்ப்ங்ஸ்ரீற்ண்ர்ய்ள்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்

  தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை மேம்படுத்த வலியுறுத்தல்

  தஞ்சாவூர், மார்ச் 13: தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை வளப்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சாவூரில் சனிக்கிழமை தொடங்கிய தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க 5-வது மாநில மாநாட்டின், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் என். சம்பத் தலைமை வகித்தார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலர் சி.எச். வெங்கடாசலம், துணைப் பொதுச் செயலர் தபன்குமார் போஸ், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச் செயலர் எஸ்.எஸ். தியாகராஜன், தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் சங்கப் பொதுச் செயலர் இ. அருணாசலம் ஆகியோர் பேசினர்.

    தமிழகத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் பலம் பெற்ற அமைப்புகளாகத் திகழவும், இதன்வாயிலாக, கிராமப் பொருளாதாரம் உயரவும், தேவையான பரிந்துரைகளை அளிக்கவும், அதை அமல்படுத்தவும் சிறப்புக் குழு ஏற்படுத்த வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க வேண்டும்.  தொடக்க வங்கிகளில் பணியாற்றி மத்திய கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு, அவர்கள் ஏற்கெனவே பெற்றுவந்த சம்பளங்களுக்கு குறைவின்றி தரவேண்டும். பணிப்பரவல் முறையில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களை வங்கிகளில் நிரந்தரப் பணியாளர்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கலைக்கப்பட்ட நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுப் பணியிடங்கள் அளிக்க வேண்டும். தமிழக கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களை மறுமலர்ச்சி செய்ய வேண்டும்.    கூட்டுறவு வங்கிகளை நவீனமயமாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் அனைத்துப் பணியாளர்களின் ஓய்வு கால வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய மறு முதலீட்டு நிதி ரூ. 3,070 கோடியை வங்கிகளுக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     தொடர்ந்து, கூட்டுறவு வங்கி ஊழியர்களின் பேரணி நடைபெற்றது.

     தஞ்சாவூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்கச் செயலர் க. அன்பழகன் வரவேற்றார். செயலர் ஜி. வைரப்பன் நன்றி கூறினார்.

  அரியலூர் அருகே

  300 கைக் கடிகாரங்கள் பறிமுதல்

  அரியலூர், மார்ச் 13: அரியலூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட 300 கைக் கடிகாரங்கள், ரூ. 16,800 ரொக்கம் ஆகியவற்றை சனிக்கிழமை இரவு போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

     சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தல், இலவசப் பொருள்கள் வழங்குதல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், அரியலூர் மாவட்டம், கீழப்பழூர் கடைவீதியில் மாவட்ட ஆட்சியர் தி.க. பொன்னுசாமி, ஏ.டி.எஸ்.பி. ராமலிங்கம் உள்ளிட்ட போலீஸôர்   சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

     அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனையிட்டதில், அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட 300 கைக் கடிகாரங்கள், ரூ. 16,800 ரொக்கம் ஆகியவற்றை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

     இதையடுத்து, காரில் வந்த பாபநாசத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனிடம் போலீஸôர் மேற்கொண்ட விசாரணையில், தான் மொத்த கடிகார வியாபாரி என்றும், அரியலூர், பெரம்பலூர், சேலம் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக அவற்றைக் கொண்டு செல்வதாகவும் அவர் கூறினார்.

  சமூகச் சிக்கல்கள் குறித்து இலக்கியவாதிகள் கவலைப்பட வேண்டும்

  திருச்சி, மார்ச் 13: சமூகச் சிக்கல்கள், நெருக்கடிகள் பற்றியெல்லாம் இலக்கியவாதிகள் கவலைப்பட வேண்டும் என்றார் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன்.

  திருச்சியில் "உயிர் எழுத்து' மாத இதழ் சார்பில், சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அமுதன் அடிகள் விருது பெற்ற நாடக ஆசிரியர் முத்துவேலழகன் ஆகியோருக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்- கலைஞர்கள் சங்க துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா தலைமை வகித்தார்.

  விழாவில் பங்கேற்றோர் பேசியது:

  விமர்சகர் ந. முருகேசபாண்டியன்: எப்போதும் தொலைக்காட்சிக்கு முன்பு அமர்ந்து கொண்டிருக்கும் தக்கைகளாகத்தான் மனிதர்கள் மாறியிருக்கிறார்கள். அசலான, சுயமான சிந்தனை இல்லை.

  பெண்களை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்படும் நாடகம் "ஜன்மா'. ஆண் மனநிலையிலிருந்து காலம் காலமாக பெண்கள் எவ்வாறெல்லாம் அடக்கிவைக்கப்படுகிறார்கள் என்பதைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மகாபாரதத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய பிரதி "ஜன்மா'.

  ஏறத்தாழ 25 நாடகங்களுக்கு மேல் எழுதி, இயக்கியுள்ள முத்துவேலழகன் திருச்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்லர், தமிழகத்துக்கே சொந்தமானவர் என்றார் அவர்.

  எழுத்தாளர் சு. வேணுகோபால்:  பசி பற்றிய படைப்புகள்தான் நாஞ்சில் நாடனின் பெரும்பாலான படைப்புகளின் கருவாக இருக்கும். எழுத்துக்கு எழுத்து, வரிக்கு வரி இருக்கும் செறிவுதான் அவரது படைப்புகளை நகர்த்திச் செல்கின்றன. கண்ணீர்க் குரலும், வேதனைக் குரலும் நாவல்களில் மிகுந்திருக்கின்றன.

  எல்லாவற்றையும் பயணம்தான் கற்றுக் கொடுத்திருக்கிறது என்பதை நாஞ்சில் நாடனிடம் இருந்து புரிந்து கொள்ளலாம். மரபைச் சரியாகக் கைக்கொள்ளும் திறனும் அவரிடம்தான் வாய்த்திருக்கிறது என்றார் அவர்.

  அமுதன் அடிகள்: நல்ல படைப்பாளிகள் மக்களிடம் பிரபலமாக இருப்பதில்லை. தமிழில்தான் இந்தச் சாபக்கேடு. மனதளவில் நாஞ்சில் நாட்டை விட்டு நாஞ்சில் நாடன் வெளியே வரவில்லை. அவரது படைப்புகளில் மும்பையிலுள்ள கதாபாத்திரமும் நாஞ்சில் மொழிதான் பேசுகிறது. கதைக்கேற்ற எழுத்து நடையைக் கொண்டு இருப்பவர் நாடக ஆசிரியர் முத்துவேலழகர் என்றார் அவர்.

  நாஞ்சில் நாடனின் ஏற்புரை: இந்த மொழிக்குச் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. இந்த நாட்டுக்குச் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது. ஒன்றுமே செய்யாதவர்கள் எல்லாம் வீதிகளில் மூலைக்கு மூலை சிலையாக நிற்கிறார்கள்.

  என் வரிப் பணத்தை வாங்கிக் கொண்டு எனக்கே இலவசம் அளிக்கிறார்களே, இதைக் கேட்பது யார்? வாக்காளர்களுக்கு பணம் அளிக்கும் போது மறுக்கும் உரிமையாவது மக்களிடம் இருக்கிறதா? எனத் தெரியவில்லை.

  வேண்டாம் என்று சொல்லிவிட்டு சில ஊர்களில் வசித்திட முடியுமா? இதைச் செய்யக்கூட ஓர் இயக்கம் தேவைப்படுகிறது. நாளுக்கு நாள் டன் கணக்கில் குப்பைகள் சேருகின்றன. இவற்றை அப்புறப்படுத்தவே போதிய திட்டம் நம்மிடம் இல்லை. என்ன செய்யப் போகிறோம்?

  தேசியக் கொடியைக் கட்டிக் கொண்டு காரில் செல்வதற்குத் தகுதியுள்ள அரசியல்வாதிகள் இருக்கின்றனரா? கறுப்பு என்ற நிறத்தின் மீது ஏன் இத்தனை வெறுப்பு? துக்க நிகழ்ச்சிகளில் மட்டும் கறுப்பைப் பயன்படுத்த வேண்டுமா என்ன?

  இலக்கியவாதிகள் இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும். சமூகச் சிக்கல்கள் பற்றி, சமூகத்துக்குள்ள நெருக்கடிகள் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும். சமகால இலக்கியங்கள் என்பவை எவை? அந்தந்தக் காலத்திலுள்ள அவலங்களைப் பற்றி அக்கறை கொள்பவைதான் சமகால இலக்கியங்கள் என்றார் அவர்.

  கெüரா ராஜசேகர், கவிஞர் தேவேந்திரபூபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உயிர் எழுத்து ஆசிரியர் சுதீர் செந்தில் வரவேற்றார். ஆங்கரை பைரவி நன்றி கூறினார்.

  பறக்கும் படையினர் தீவிர சோதனை

  திருச்சி, மார்ச் 13: திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறை மீறல்களைக் கண்டறிந்து தடுப்பதற்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் சனிக்கிழமை இரவு முதல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

  சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்றுகின்றனவா என்பதைக் கண்டறியவும், விதிமுறை மீறல்கள் இருப்பின் அதைத் தடுப்பதற்காகவும் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கும் தனித்தனி பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

  பறக்கும் படையில் வட்டாட்சியர் நிலையிலான அதிகாரியின் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர், விடியோகிராபர் உள்ளிட்ட 5 பேர் உள்ளனர்.

  இந்த நிலையில், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்லப்படுவதாக வந்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டு, அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

  இதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளுக்காக அமைக்கப்பட்ட பறக்கும் படையினர், சனிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து மாவட்டம் முழுவதிலும் சந்தேகத்துகுரிய இடங்களில் சோதனையும், தீவிர வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர்.

  இந்தச் சோதனையின் போது, பணம், அன்பளிப்பு பொருள்கள் கைப்பற்றப்படவில்லை. ஆனாலும், பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபடுவர் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

  மாநகர போலீஸôரும் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  நாட்டு நலப் பணித் திட்ட முகாம்

  திருச்சி, மார்ச் 13: திருச்சி மாவட்டம், அரசங்குடியில் நாட்டு நலப் பணித் திட்ட சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

  பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் ஆகியன சார்பில் அரசங்குடி, தொண்டமான்பட்டி ஆகிய இடங்களில் இந்தச் சிறப்பு முகாம் நடைபெற்றது.

  முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கு. ராஜேஸ்வரி, ஊராட்சி மன்றத் தலைவர் சாமிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். முகாமையொட்டி, இரு கிராமங்களிலும் 7 நாள்கள் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

  முகாமின் நிறைவு நாளில், பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் செல்லகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.

  முகாம் ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட பேராசிரியர்கள் சிவகுமார், சேகர் ஆகியோர் செய்திருந்தனர்.

  லாரி மீது கார் மோதல்:

  திருச்சி துணிக் கடை

  உரிமையாளர் சாவு

  மணப்பாறை, மார்ச் 13: மணப்பாறை வட்டம், துவரங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாரி மீது கார் மோதியதில், திருச்சி துணிக் கடை உரிமையாளர் உயிரிழந்தார்.

  திருச்சி தில்லைநகரைச் சேர்ந்தவர் ராமநாதன் (54). இவர், திருச்சி மலைக்கோட்டை அருகே துணிக் கடை நடத்திவந்தார்.

  இவரும், இவரது நண்பரும், துறையூரைச் சேர்ந்தவருமான கிருஷ்ணமூர்த்தியும் (37), சிவகாசி சென்றுவிட்டு காரில் ஊருக்குப் புறப்பட்டனர். திருச்சி உத்தமர்கோவிலைச் சேர்ந்த கிங்ஸ்டன் (23) காரை ஓட்டினார்.

  துவரங்குறிச்சி பிரிவு சாலைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது.

  இதில், ராமநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் லேசான காயம் ஏற்பட்டது. துவரங்குறிச்சி போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  முசிறி அருகே

  கழுத்தை நெரித்து

  பெண் கொலை

  முசிறி, மார்ச் 13: முசிறி வட்டம், மேட்டுப்பாளையம் அருகே தோட்டத்தில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

  தாத்தையங்கார்பேட்டையை அடுத்துள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து கருப்பம்பட்டி செல்லும் வழியில், சேலத்துக்காரர் தோட்டம் என்றழைக்கப்படும் தோட்டத்தில் கழுத்தை நெரித்து பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீஸôருக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தாத்தையங்கார்பேட்டை போலீஸôர் சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் மேட்டுப்பாளையம் மோருப்பட்டியைச் சேர்ந்த சம்பத் மனைவி சின்னப்பொண்ணு (45) என்று தெரிய வந்தது.

  மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்த சின்னப்பொண்ணுவுக்கு, அதே பேரூராட்சியில் பணியாற்றி வரும் மற்றொருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. தாத்தையங்கார்பேட்டை காவல் ஆய்வாளர் தமிழ்மாறன் விசாரித்து வருகிறார்.

  சமயபுரம் கோயில் பூச்சொரிதல் விழா தொடக்கம்

  திருச்சி, மார்ச் 13: திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழாவின் முதல் பூச்சொரிதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

    சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசி,

  பங்குனி மாதங்களில் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறும்.

    மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல், பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அருள்மிகு மாரியம்மன் உலக நன்மைக்காக விரதம் இருந்து அருள் புரிவதாக ஐதீகம். இது பச்சைப்பட்டினி விரதம் என்றழைக்கப்படுகிறது.

    இதனால், மாசி கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமை வரை அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.

     இதனடிப்படையில், இந்த ஆண்டுக்கான முதல் பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

     திருக்கோயில் இணை ஆணையர் பா. பாரதி, அறங்காவலர் குழுத் தலைவர் வீகேயென். கண்ணப்பன் மற்றும் அறங்காவலர்கள், பக்தர்கள் கோயிலின் நுழைவு வாயிலில் இருந்து பூத்தட்டுகளை கையில் ஏந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தனர்.

  பின்னர், அம்மனுக்கு பூச்சொரிதலும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றன.

    தொடர்ந்து, திரளான பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர்.

  ஸ்ரீ நம்பெருமாள் அருள்பாலிப்பு

  திருச்சி, மார்ச் 13: பங்குனித் திருவிழாவையொட்டி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் உத்சவர் ஸ்ரீ நம்பெருமாள் ஞாயிற்றுக்கிழமை ஜீயபுரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  இந்த நிகழ்ச்சிக்காக ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து ஸ்ரீ நம்பெருமாள் சனிக்கிழமை இரவு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து, அங்கு கூழ் அமுது படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  பின்னர், காலை 6 மணி முதல், 10 மணி வரை வழிநடை உபயங்கள் கண்டருளினார். இதையடுத்து, மீண்டும் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  மாலை 4.30 மணியளவில் ஜீயபுரத்தில் இருந்து புறப்பட்டு, வழிநடை உபயங்கள் கண்டருளி மேலூர் வழியாக இரவு ஸ்ரீரங்கம் கோயிலை அடைந்தார்.

  மூவேந்தர் முன்னேற்ற

  கழகத்தில் பிளவு?

  திருச்சி, மார்ச் 13:  சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஓரிடத்தை பெற்றுள்ள மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில், கூட்டணி குறித்த அந்தக் கட்சியின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையாரின் முடிவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

  திருச்சி உறையூரில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் ராமசுப்பிரமணியன் காடுவெட்டியார் தலைமையில் அந்தக் கட்சியினர் ரகசிய கூட்டம் நடத்தினர்.

  இந்தக் கூட்டத்தில், மாநில இளைஞரணி துணைச் செயலர் சிற்றரசு உள்பட 10-க்கும் அதிகமான மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.

  கூட்டணி தொடர்பாக ஸ்ரீதர் வாண்டையார் எடுத்த முயற்சி தன்னிச்சையானது என்றும், இதனால், பெரும்பான்மையான முக்குலத்தோரை அவமதிக்கும் செயலுக்கு துணை போயிருப்பதாகவும் சுட்டிக்காட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், திமுக அணியில் கூடுதலான தொகுதிகளை ஒதுக்காவிட்டால் அதிருப்தியில் உள்ளோரை ஒருங்கிணைத்து புதிய கட்சி தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

  மதுக்கூடங்களை 3 நாள்கள் மூட முடிவு

  திருச்சி, மார்ச் 13:  திருச்சி மாநகரிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளிலுள்ள மதுக்கூடங்களை (பார்) திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை மூடிவைப்பது என்று, திருச்சி மாவட்ட மதுபான வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

  திருச்சி மாவட்ட மதுபான வியாபாரிகள் சங்கத்தின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பி. மகாலிங்கம் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி டாஸ்மாக் அதிகாரிகளும், காவல் துறையினரும் கூட்டு நடவடிக்கை என்ற பெயரில் மதுக்கூடத்தை தொடர்ந்து நடத்த முடியாத அளவுக்கு கெடுபிடி செய்து வருகின்றனர்.

  கடந்த 10-ம் தேதி இரவு 8 மணிக்கு மதுக்கூடங்களில் சோதனை என்ற பெயரில் காவல் துறையினர் புகுந்து வேலையாள்களை அடித்துத் துன்புறுத்தி, இரவு 10 மணிக்கு மேல் வியாபாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். மதுக்கூட உரிமையாளர்களை பிணையில் வெளிவரா முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

  பல லட்சங்களை முதலீடு செய்து முறைப்படி உரிமம் எடுத்தும், இதுபோன்ற கெடுபிடிகளால் தொடர்ந்து தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, காவல் துறையினரின் அராஜக போக்கைக் கண்டித்து, திங்கள்கிழமை (மார்ச் 14) முதல் புதன்கிழமை வரை 3 நாள்களுக்கு மதுக்கூடத்தை நடத்தாமல் மூடிவைப்பது என்று முடிவு செய்யப்படுகிறது.

  இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு ஏற்படாவிடில், திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து மதுக்கூட உரிமங்களையும் டாஸ்மாக் நிறுவனத்திடமே திருப்பி அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

  இலவச கார் ஓட்டுநர் பயிற்சி பெற

  பெண்கள் விண்ணப்பிக்கலாம்

  திருச்சி, மார்ச் 13: இலவச கார் ஓட்டுநர் பயிற்சி பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கத் தலைவர் ராணி முரளிதரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கம், அபிராமி பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை, கிப்ட் டெக்னாலஜிஸ் ஆகியன இணைந்து பெண்களுக்கு பல்வேறு இலவச தொழில் பயிற்சிகளை அளிக்க உள்ளன.

  இதன்படி, கார் ஓட்டுநர், கார் வாட்டர் சர்வீஸ், அழகுக்கலை, கணினி, ஆடை அலங்கார வடிவமைப்பு, தையல் போன்ற பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்படவுள்ளன. பயிற்சியில் சேர விரும்புவோர் தலைவர், தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கம், எண். 1பி, செயின்ட் பால் வளாகம், பாரதியார் சாலை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431-4200040 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai