பொன்னமராவதி, பிப். 10: பொன்னமராவதி அரிமா அரங்கில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் மனவளக்கலை மன்றம் சார்பில் ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் தா. மணி தலைமை வகித்து பேசியது:
இந்தியா மனிதவளம் மிக்க நாடாகும். மனித வளமெல்லாம் மனவளமாக மாறுகின்ற பொழுதுதான் வலிமை மிக்க நாடாக இந்தியா உருவாகும்.
மனவளம் பெற்ற சமூகத்தால் மட்டுமே வலிமையான நாட்டை உருவாக்க முடியும். மனவளம் பெற்ற ஆசிரியர்களால்தான் எழுச்சிமிக்க இளம் தலைமுறையை உருவாக்க முடியும் என்றார் அவர்.
பயிற்சிக்கு மனவளக்கலை மன்ற நிர்வாகி ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சியினை பேராசிரியர் திருமா. பூங்குன்றன் அளித்தார். மன்ற உறுப்பினர்கள் அ. கருப்பையா, இள. பாபு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.