பெரம்பலூர், பிப். 10: பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையம் சார்பில், பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களுக்கான உண்டு உறைவிடப் பள்ளித் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தலைமை வகித்த மாவட்டத் திட்ட அலுவலரும், முதன்மைக் கல்வி அலுவலருமான கோ. சீத்தாராமன் பேசியது:
கற்றலில் இடைநின்ற மாணவர்கள் தங்கிப் படிக்க அடிப்படைத் தேவையான உணவு, சீருடை, பள்ளிப் புத்தகங்கள், எழுதுப் பொருள்கள், காலணி, புத்தகப்பை, படுக்கை, தலையணை உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் இந்த உண்டு உறைவிடப் பள்ளியில் வழங்கப்படுகிறது என்றார் அவர்.
தொடங்கிவைத்த பெரம்பலூர் வருவாய்க் கோட்டாட்சியர் இரா. ரேவதி பேசியது:
பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க இங்கு சிறந்த வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்வியால் அனைவரது வாழ்க்கையும் மேம்படும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் மாவட்ட உதவித் திட்ட அலுவலர் செ. சிவசாமி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் வீராசாமி, ஆசிரியர் பயிற்றுநர்கள் சந்திராதேவி, அனுராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.