கும்பகோணம், பிப். 10: கும்பகோணத்தில் சனிக்கிழமை (பிப். 11) பாமக மாநில இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என அந்தக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலர் ம.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
பாமக மாநில இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் சனிக்கிழமை காலை மலைக்கோட்டை விரைவு ரயில் மூலம் கும்பகோணத்திற்கு வருகிறார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் அவர், கும்பகோணம் மகாமக குளம் மேல்கரையில் அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று, பாமகவின் பாதையில் புதிய அரசியல், புதிய நம்பிக்கை, புதியது என்ன என்பதை விளக்கி சிறப்புரையாற்றுகிறார்.
மேலும், பாமக மாநிலத் தலைவர் கோ.க. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ஜெ. குரு, மாநில இளைஞரணி செயலர் த. அறிவுச்செல்வன், மாநில துணைப் பொதுச் செயலர் கோ. ஆலயமணி உள்ளிட்டோரும் பேசுகின்றனர். இந்தக் கூட்டத்தில் பாமக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை வார்டு பொறுப்பாளர்கள், செயல்வீரர்கள், இளைஞர் அணியினர், தமிழக மாணவர் சங்கத்தினர், இளம்பெண்கள் பாசறையைச் சேர்ந்தவர்கள், வன்னிய இளம் படையினர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.