தஞ்சாவூர், பிப். 10: தஞ்சாவூரில் பழ வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக, இளைஞர் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.
தஞ்சாவூர் பூக்காரத் தெரு பகுதி கண்டியர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் பூமிநாதன் (40). பழ வியாபாரி. இவர் வியாழக்கிழமை பிற்பகல் வடக்கு அம்பலக்காரத் தெருவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக, பூக்காரத் தெரு பகுதி வடக்கு முஸ்லிம் தெருவைச் சேர்ந்த வீரமணி மகன் பெரியசாமி (23), ராஜசேகர், எஸ். சுரேஷ், மணிகண்டன் ஆகியோரை தேடிவந்தனர்.
இவர்களில் பெரியசாமி திருவையாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார். இவரை 15 நாள் காவலில் வைக்குமாறு நடுவர் வனிதா உத்தரவிட்டார். விசாரணையில், பெரியசாமியின் தந்தை வீரமணியை பூமிநாதன் 1996-ம் ஆண்டில் கொலை செய்ததாகவும், அதுதொடர்பான முன்விரோதம் காரணமாக இப்போது பூமிநாதனை பெரியசாமி உள்ளிட்டோர் வெட்டிக் கொலை செய்ததாகவும் தெரிய வந்ததாம்.